நாங்குநேரியில் இன்று பேச்சியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம்

நெலலை, ஏப். 26:  நாங்குநேரியில் யாதவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பேச்சியம்மன், இசக்கியம்மன், சுடலைமாட சுவாமி கோயிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் இன்று (26ம் தேதி) நடக்கிறது. நேற்று முன்தினம் (24ம் தேதி)  அதிகாலை 4 மணிக்கு மங்கள இசை, விக்னேஷ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. காலை 5.30 மணிக்கு தேவதா அனுக்ஞை, எஜமானார் சங்கல்பம், புண்யாகவாஜனம், கும்ப பூஜையை தொடர்ந்து மஹா கணபதி ஹோமம் முதலான பல்வேறு ஹோமங்கள் நடந்தன. மாலை 5 மணிக்கு சித்தி விநாயகர் கோயிலில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு வாஸ்து சாந்தி, பிரவேஷ பலி, கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், ரக்ஷாபந்தனம் முதலான பூஜைகளுக்கு பிறகு யாகசாலை பிரவேசம், முதலாம் யாகசாலை பூஜை நடந்தது.

2ம் நாளான நேற்று (25ம் தேதி) காலை 8.30 மணிக்கு லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, 9 மணிக்கு 2ம் கால யாகசாலை பூஜைக்கு பிறகு மந்திர புஷ்பம், சதுர்வேத பாராயணம், ஆஹம ஸ்தோத்திரம், திருமுறை பாராயணம் நடந்தது. மாலை 7 மணிக்கு சிவன் சகஸ்நாமம், பாராயணம், 3ம் கால யாகசாலை பூஜையை தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தனம் சாற்றுதல், கண் திறப்பு பூஜை நடந்தது. கும்பாபிஷேக தினமாகிய இன்று (26ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு 4ம் கால யாகசாலை, நாடி சந்தானம், சக்தி உரு ஏற்றல், பிம்ப சுத்தி, ரக்சாபந்தனம் முதலான பல்வேறு பூஜைகளும்,  காலை 6.30 மணிக்கு மேல் யாத்ரா தானம், கடம் புறப்பாட்டுக்குப் பிறகு பேச்சியம்மன், இசக்கியம்மன், சுடலைமாட சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தூத்துக்குடி மாரியம்மன் கோயில் அர்ச்சகர் முருகன் சுவாமிகள் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்தி வைக்கிறார். காலை 9 மணிக்கு மஹா அபிஷேக அலங்கார தீபாராதனையும் நண்பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.

Related Stories: