படிப்புக்கு ஆசைப்பட்டு வழிப்பறியை மறைத்த கல்லூரி மாணவி

நாங்குநேரி, ஏப். 26:   நாங்குநேரி அருகேயுள்ள மறுகால்குறிச்சியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவி சுந்தரி (19, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், ஆரல்வாய்மொழியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். சுந்தரி தினமும் பஸ் அல்லது ரயிலில் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம். கடந்த டிச.28ம் தேதி கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய சுந்தரி மாலையில் தனது தம்பி மற்றும் தங்கையுடன் மொபட்டில் மீனவன்குளத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது மற்றொரு பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், நாங்குநேரி டோல்கேட் அருகே உள்ள காட்டுப்பாதையில் வழிமறித்தனர். கத்தியைக் காட்டி மிரட்டி சுந்தரி காதில் அணிந்திருந்த 3 கிராம் தங்க கம்மலை பறித்துக் கொண்டு தப்பினர்.

இச்சம்பவம் வெளியே தெரிந்தால் பாதுகாப்பு கருதி பெற்றோர் தன்னை கல்லூரிக்கு செல்லவிடாமல் தடுத்து விடுவார்கள் என கருதிய சுந்தரி, உடன் வந்த தம்பி, தங்கையிடம் இதுபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என கூறினாள். மேலும் பெற்றோருக்கு சந்தேகம் வராமலிருக்க கவரிங் கம்மலை வாங்கி அணிந்து கொண்டார். இதனிடையே 4 மாதங்கள் கடந்த நிலையில், கவரிங் கருக்கத் துவங்கியது. இதுகுறித்து பெற்றோர் விசாரிக்கவே சுந்தரி உண்மையை கூறினார். பின்னர் அவரது பெற்றோர் நாங்குநேரி போலீசில் புகார் அளித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன்சன் சாம்ராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: