கருப்பாநதி அணை சாலையை ஆக்கிரமித்துள்ள முட்புதர்களை அகற்ற நடவடிக்கை

கடையநல்லூர், ஏப். 26:  கருப்பாநதி அணைக்கட்டு பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் நடந்து வருகிறது. இதில் திரிகூடபுரத்தில் இருந்து அணைக்கு செல்லும் சாலை மொத்தம் 8 கிமீ தொலைவாகும். இந்த 8 கிமீட்டரில், சுமார் 3 கிமீ தொலைவிலான சாலையில் இருபுறமும் முட்செடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. அணைப்பகுதியில் ஏற்கனவே 60க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். மேலும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் காலை மற்றும் இரவு நேரங்களில் தங்களது நிலங்களுக்கு சென்று வருகின்றனர். இச்சாலையில் போதுமான மின்விளக்கு வசதிகளும் இல்லை.

தற்போது கோடை விடுமுறை என்பதால் கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர். வளைவு பகுதிகளில் சாலையின் இருபுறமும் அடர்ந்து காணப்படும் முட்செடிகளால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.  கோடை காலம் என்பதால் இரவு நேரங்களில் தண்ணீர் தேடி யானைகள், மான், மிளா மற்றும் காட்டு பன்றிகள் இச்சாலை வழியாக செல்வதாகவும் கூறப்படுகிறது. சாலையின் இருபுறமும் முட்செடிகள் வளர்ந்துள்ளதால் வளைவு பகுதிகளில் எதிரே வரும் வாகனங்களோ அல்லது வனவிலங்குகளே தெரியாததால் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே சாலையோரம் வளர்ந்துள்ள முட்செடிகளை வெட்டி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன், மின்விளக்கு வசதியும் செய்து தர வேண்டுமென பொதுப்பணித்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: