களக்காடு பகுதியில் சூறாவளியில் சேதமான வாழைகளுக்கு இழப்பீடு

களக்காடு, ஏப். 26: களக்காடு பகுதியில் நேற்று முன்தினம் மாலை இடி, மின்னலுடன் கோடை மழை கொட்டியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த மழையின் போது சூறைக்காற்றும் வீசியது. சுழன்றடித்த காற்றினால் களக்காடு, சிதம்பரபுரம், சிவபுரம், மூங்கிலடி, கீழப்பத்தை, மஞ்சுவிளை, மேலப்பத்தை, கருவேலங்குளம், தம்பிதோப்பு பத்மநேரி, எஸ்.எஸ்.பள்ளிவாசல் மாவடி, திருக்குறுங்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டிருந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்தன. இதனால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வாழைத்தார்கள் விலை 1 கிலோவிற்கு ரூ.9 ஆக வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், காற்றினால் மேலும் வாழைகள் சாய்ந்ததால் வாழைத்தார்கள் விலை இன்னும் வீழ்ச்சி அடைய வாய்ப்பிருப்பதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் பெரும்படையார், நாங்குநேரி தாலுகா செயலாளர் முருகன் ஆகியோர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில், ‘‘வாழைகள் நாசமானதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. சமீபகாலமாக விலை வீழ்ச்சியால் வேதனை அடைந்திருந்த விவசாயிகளுக்கு சூறைக்காற்றால் வாழைகள் சாய்ந்தது பேரிடியாக உள்ளது. எனவே  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாசமடைந்த வாழைகளை ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் அதேபோல் இப்பகுதியில் விவசாய கடன்கள் மற்றும் விவசாய தங்க நகை கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்தி உள்ளனர். இதனிடையே கல்லடி சிதம்பரபுரத்தில் தொழிலாளி சாமுவேல் (45) என்பவரது குடிசை வீட்டின் மீது மின்னல் தாக்கியதில் வீட்டில் இருந்த பீரோ, டிவி, மின் விசிறி உள்பட பொருட்கள் கருகி சேதமடைந்தன.

Related Stories: