2ம் கட்ட மெட்ரோ ரயில் பணி 69,180 கோடியில் 128 ரயில் நிலையங்கள்

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்கான திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 69,180 கோடி செலவில் 128 ரயில் நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் 45.1 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், போக்குவரத்தை மேம்படுத்தவும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. அதன்படி, சென்னை விமான நிலையம் முதல் கோயம்பேடு மற்றும் வண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. மேலும், வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை மேம்பாலம் வழியாக சேவையை தொடங்குவதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது.  இந்நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் தொடங்கியுள்ளது. இதற்காக ஏற்கனவே மத்திய, மாநில அரசுகளிடம் ஒப்புதல் பெற்று, நில ஆர்ஜிதம் செய்யும் பணி, மண் தர பரிசோதனையும் நடந்து வருகிறது. குறிப்பாக 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் 118.9 கி.மீ தூரத்துக்கு நடைபெற உள்ளது. இதற்கான விரிவான திட்டஅறிக்கை மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.

அதன்படி மாதவரம்- சிப்காட் இடையிலான 3வது வழித்தடம் 45.8 கி.மீ தூரத்துக்கு அமைக்கப்பட உள்ளது. இதில் 19.1 கி.மீ தூரம் மேம்பாலம் வழியாகவும், 26.7 கி.மீ சுரங்க வழித்தடத்திலும் அமைய உள்ளது. 4வது வழித்தடம் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை 26.1 கி.மீ தூரத்துக்கு அமைய உள்ளது. இதில் மேம்பாலத்தில் 16 கி.மீ தூரத்துக்கும், 10.1 கி.மீ தூரத்துக்கு சுரங்க வழித்தடம் அமைய உள்ளது. 5வது வழித்தடம் மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே 47 கி.மீ தூரத்துக்கு அமைய உள்ளது. இதில் 41.2 கி.மீ தூரம் மேம்பாலத்திலும், 5.8 கி.மீ சுரங்க வழித்தடமாகவும் மெட்ரோ ரயில் பாதை அமைய உள்ளது. மாதவரம் - சிப்காட் வழித்தடத்தில் மொத்தம் 50 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளது. இதில் 20 மேம்பால ரயில் நிலையங்களாகவும், 30 சுரங்க வழித்தட ரயில் நிலையங்களாகவும் அமைய உள்ளது.

கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி இடையே 30 ரயில் நிலையங்கள் அமைய உள்ளது. இதில் 18 மேம்பால வழித்தடத்திலும், 12 சுரங்க வழித்தடத்திலும் வர உள்ளது. மாதரம்- சோழிங்கநல்லூர் இடையே 48 ரயில் நிலையங்கள் வர உள்ளது. இதில் 42 மேம்பால வழித்தடத்திலும், 6 சுரங்க வழித்தடத்திலும் அமைய உள்ளது. 6 விதமான வடிவமைக்களில் இந்த 128 ரயில் நிலையங்களை உருவாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 2018ம் டிசம்பர் கணக்கீட்டின்படி வரிகளுடன் சேர்த்து இந்த திட்டத்ததை முடிக்க 60,335 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. இந்த பணிகளை முடிக்க தற்போதைய நிலையில், 69,180 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2வது கட்ட பணிகள் முடிந்த பின் அதிகாலை 5 மணி முதல் இரவு 12 மணி ரயில்கள் இயக்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: