பல்லாவரம் நகராட்சியில் துப்புரவு பணி சுணக்கம் குப்பை குவியலாக மாறிய சாலைகள் : சுகாதார சீர்கேடு அபாயம்

தாம்பரம், ஏப்.26: பல்லாவரம் நகராட்சியில் துப்புரவு பணிகள் சரிவர மேற்கொள்ளப்படாததால், சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் குப்பை குவியலாக காட்சியளிக்கின்றன. பல்லாவரம் நகராட்சியில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. அதுமட்டுமின்றி ஏராளமான வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், காய்கறி, மீன் மார்க்கெட், இறைச்சி கூடங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளன.

நகராட்சி பகுதிகளில் தினசரி சேகரமாகும் குப்பை, கழிவுகளை துப்புரவு பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். ஆனால், பல இடங்களில் முறையாக குப்பைகளை அகற்றாததால், முக்கிய சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் குப்பை குவிந்து கிடக்கிறது. குறிப்பாக, 19வது வார்டு மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் நகராட்சி ஊழியர்கள் சரிவர குப்பை கழிவுகளை அகற்றுவது இல்லை. இதனால், மருத்துவமனைகள், பள்ளிகள், குடியிருப்பு பகுதிகள், திருமலை நகர் பிரதான சாலை, குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், நெமிலிச்சேரி, ராதா நகர் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகள், 24வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை மற்றும் தெருக்களில் குப்பை குவியலாக காட்சியளிக்கிறது.

இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசு உற்பத்தி அதிகரித்து பொதுமக்கள் மர்ம காய்ச்சல் பீதியில் உள்ளனர். இதுபற்றி பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் துப்புரவு ஊழியர்கள் முறையாக குப்பையை அகற்றுவதே இல்லை. குறிப்பாக, 19வது வார்டு திருமலை நகர் பிரதான சாலை மற்றும் அதன் சுற்று வட்ட பகுதிகளில் உள்ள குப்பை கழிவுகளை சரிவர அகற்றுவது இல்லை. வாரத்தில் இரண்டு முறை மட்டுமே குப்பைகளை அகற்றுகின்றனர். இதனால் பல பகுதிகளில் குப்பை கழிவுகள் குவிந்து காட்சியளிக்கின்றன. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் வார்டுகளில் ஆய்வுக்கு வருவதே இல்லை. இதனால் குப்பைகள் அகற்றப்பட்டதா, அகற்றப்படாமல் இருக்கின்றதா என்பதை கூட அவர்கள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக நகராட்சி பகுதிகளில் உள்ள குப்பைகளை தினமும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: