நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் போலீசார் பணியிட மாற்றத்தில் விதிமீறல் : காற்றில் பறந்த தேர்தல் கமிஷன் உத்தரவு

சென்னை, ஏப்.26: நாடாளுமன்ற தேர்தலையொட்டி சென்னை அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் போலீசார் பணியிட மாற்றத்தில் விதிமுறைகள் கடைபிடிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை உயரதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலையொட்டி ஒரே காவல் நிலையத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய போலீசாரை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதன்படி சென்னை அண்ணாநகர் காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசார், தங்களை தூரத்தில் உள்ள இடத்துக்கு மாற்றிவிடுவார்களோ என்பதால், உயர் அதிகாரிகளுடன் பேசி, அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் பெற்று சென்றனர். மேலும் சிலர் வேண்டப்பட்ட அரசியல் பிரமுகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இடமாற்றம் வாங்கி சென்றதாக கூறப்படுகிறது.

குற்றச்சம்பவங்களை தடுக்கவும், தேர்தல் நேரத்தில் சரியான முறையில் பணியாற்ற வேண்டும் என்பதற்காக போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால், இதனை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்ட சில போலீசார், தங்களுக்கு விருப்பமான காவல் நிலையங்களுக்கு உயரதிகாரிகளின் உதவியோடு சென்று விட்டனர். இந்த பணியிட மாற்றத்தில் ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனால், நியாயமாக வேலை செய்யும் போலீசாரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே முறைகேட்டில் ஈடுபட்ட போலீசாரை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: