கோயில் சீரமைப்பு பணிக்காக ஒதுக்கிய ₹50 ஆயிரம் அபேஸ் : அறநிலையத்துறையில் பக்தர்கள் புகார்

சென்னை:  திருத்தணி அருகே அகூர் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலை சீரமைக்க, இந்து அறநிலையத்துறை சார்பில் கடந்த 2016-17ம் ஆண்டு ₹1 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்காக டெண்டர் விடப்பட்டு எஸ்.கே.சண்முகம் என்பவரிடம் பணி ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவர் பணியை முடித்து கொடுக்காமல் கிராம மக்களை அணுகி, ‘‘நான் ₹50 ஆயிரம் பணம் தருகிறேன். நீங்களே கோயிலை சீரமைத்துக் கொள்ளுங்கள். பணிகளை செய்து கொண்டிருக்கும்போது மீதி பணத்தை வழங்குகிறேன்’’ என கூறியுள்ளார். இதன் பிறகு ஒப்பந்ததாரர் அகூர் கிராமத்துக்கு வரவே இல்லை என்று கூறப்படுகிறது. எனவே பணி செய்வதற்கு மீதி பணம் கேட்டு மக்கள் ஒப்பந்ததாரரை அணுகியபோது விரைவில் தருவதாக கூறி  அலைக்கழித்து வந்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் மற்றும் ஊழல் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புகார் அனுப்பி உள்ளனர். இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ‘அகூர் காளியம்மன் கோயிலை சீரமைக்க இந்து அறைநிலைய துறை ஒதுக்கிய ₹1 லட்சம் பணத்தில் ₹50 ஆயிரத்தை மட்டுமே ஒப்பந்ததாரர் வழங்கியுள்ளார். மீதி பணத்தை சுருட்டி உள்ளார். இதேபோல் 10க்கும் மேற்பட்ட கோயில்களில் திருப்பணிகளை எடுத்துவிட்டு முறையாக பணி செய்யவில்லை. செய்த வேலைக்கு பணத்தையும் தருவது இல்லை. இந்து அறநிலையத்துறை எங்கள் கோயிலுக்காக ஒதுக்கிய நிதி எங்கே போனது என? தெரியவில்லை’’ என்றனர்.

Related Stories: