பட்ஜெட்டில் 2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு வாகன நிறுத்தங்கள் அமைப்பதற்கான இடம் கண்டறியும் பணி தொடக்கம்

சென்னை, ஏப்.26: சென்னையில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வாக 2019-20ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 2 ஆயிரம் கோடி செலவில் வாகன நிறுத்தங்கள் அமைக்கும் திட்டத்திற்கான இடங்களை கண்டறியும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.  சென்னையில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதை கட்டுப்படுத்த பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகளும்  மேம்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள தி.நகர் பகுதியில் 36.5 கோடி செலவில் பலஅடுக்கு வாகன நிறுத்தம்  அமைக்கப்பட்டு வருகிறது. 6 தளங்கள் கொண்ட இதில் 550 இரு சக்கர வாகனங்களையும், 250 நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்த முடியும். இந்த திட்டம், சென்னை ஸ்மார்ட் சிட்டி நிதியில் செயல்படுத்தப்படுகிறது.

இதைப்போல், ஸ்மார்ட் சிட்டி நிதியின் மூலம் ஸ்மார்ட் பார்கிங் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. சாலையின் ஓரங்களில் உள்ள இடங்களை கண்டறிந்து வாகனங்களை நிறுத்துவதற்கான வசதியை ேமம்படுத்துவது இதன் நோக்கமாகும்.  அதன்படி 471 சாலைகளில் 10 ஆயிரம் வாகன நிறுத்தும் அமைப்பதற்கான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. 40 கோடி செலவில் இந்த திட்டம் செயல்படுத்தபடுகிறது. அனைத்து பணிகளும் முடிந்துவடைந்துள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டவுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சென்னை மாநகராட்சியில் 2 ஆயிரம் கோடி செலவில் விரிவான ஒருங்கிணைந்த வாகன நிறுத்த மேலாண்மை திட்டம், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தபடும் என்று 2019-20 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. மேலும், 2 லட்சம் இருசக்கர வாகனங்கள், 2 லட்சம் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தக்கூடிய வகையில் நிலத்தடி வாகன நிறுத்தம், பல அடுக்கு வாகன நிறுத்தம் உள்ளிட்டவைகள் அமைக்கப்படும் என்றும் அதில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த திட்டமானது சென்னை மாநகராட்சி சிறப்பு திட்டங்கள்  துறை மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பான உயர் அதிகாரிகளின் ஆலோசனைக்  கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், துணை ஆணையர் (பணிகள்) கோவிந்தராவ், தலைமை பொறியாளர் நந்தக்குமார், ஸ்மார்ட் சிட்டி தலைமை செயல் அதிகாரி ராஜ் சொரூபல், 15 மண்டலங்களின் செயற் பொறியாளர்கள், வருவாய் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வாகன நிறுத்தம் அமைக்கும் வகையில் உள்ள இடங்களை கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.  குறிப்பாக சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களை கண்டறிய வேண்டும என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த  பணி 10 நாட்களுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்ட இடங்களில் எத்தனை வாகனங்கள் நிறுத்த முடியும் என்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும். பெரும்பாலும் நகரின் முக்கிய பகுதிகளில் இந்த வாகன நிறுத்தங்கள் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

7 மண்டலங்களில் 10 இடம்

வாகன நிறுத்தங்கள் அமைப்பதற்கு தண்டையார்பேட்டை, ராயபுரம்,  திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்ைட, கோடம்பாக்கம், அடையாறு உள்ளிட்ட  7 மண்டலங்களில் 10 இடங்களை கண்டறிய வேண்டும் என்றும், திருவொற்றியூர்,  மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி,  சோழிங்கநல்லூர் உள்ளிட்ட மண்டலங்களில் தலா 5 இடங்களை கண்டறிய வேண்டும்  என்றும் மாநகராட்சி செயற் பொறியாளர் மற்றும் வருவாய் அலுவலர்களுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: