தமிழகம் முழுவதும் 2 மாதங்களாக நிதியின்றி பரிதவிக்கும் ஊராட்சி செயலாளர்கள் கோடையில் குடிநீர் வசதி செய்ய முடியவில்லை என புலம்பல்

வேலூர், ஏப்.26: தமிழகம் முழுவதும் கோடைகாலம் தொடங்கிய நிலையில் ஊராட்சிகளில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் உட்பட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நிதியின்றி ஊராட்சி செயலாளர்கள் தவித்து வருகின்றனர்.உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு காரணமாக தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் தனி அதிகாரிகளால் நிர்வாகம் செய்யப்படுகிறது. ஆனாலும், உள்ளாட்சிகளின் நிர்வாகம் முழுமையாக செயல்பட முடியவில்லை. குறிப்பாக 12,523 கிராம ஊராட்சிகளில் பணியாளர்களுக்கு சம்பளம், குடிநீர் வினியோகம், தெருவிளக்கு, சுகாதார பணிகள், மின்கட்டணம் போன்ற குறிப்பிட்ட பணிகள் மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், இதற்கான நிதி ஊராட்சி நிதிக்குழு 1ன் கீழ் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.இருந்தாலும் பெரும்பாலான ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு சம்பள பாக்கி நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தற்போது தனி அலுவலர், மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்ட பின்னரும் ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்குவதில் தொடர் தாமதம் ஏற்பட்டுள்ளது.பெரும்பாலான மாவட்டங்களில் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை பணிகள் நிறைவேற்றியதற்கு ஊராட்சி செயலர்கள் பில் பாஸ் செய்ய அதிகாரிகளிடம் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எந்த அடிப்படை வசதியையும் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையிலும் எந்த ஒரு சிறப்பு நிதியும் வழங்கப்படவில்லை. தமிழக அரசு மாதந்தோறும் வழங்கும் பொதுநிதியும் அதிகரிக்கப்படவில்லை. இதனால் நிதியின்றி ஊராட்சி செயலாளர்கள் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஊராட்சி செயலர்கள் கூறியதாவது:

‘ஊராட்சிகளுக்கு போதிய நிதி ஒதுக்குவதில்லை. கடந்த 2 மாதங்களாக தேர்தல் நன்னடத்தை விதி அமலில் உள்ளதால் எந்த பணிக்கும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் ஊராட்சிகளில் குடிநீர் குழாய் சரி பார்ப்பு, குடிநீர் தொட்டி சுத்தம் செய்தல் போன்ற அடிப்படை பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் வாங்க மற்றும் பராமரிப்பு பணிகளை கூட செய்ய முடியவில்லை. தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு பல இடங்களில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதை உடனடியாக நிவர்த்தி செய்ய முடியவில்லை. நாங்கள் கடன் வாங்கி பணிகளை செய்து விட்டாலும், அந்த தொகையை அதிகாரிகளிடம் பெறுவதற்கு நாங்கள் பெரும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. எங்களது சொந்த பணத்தை செலவிட்டாலும் அந்த தொகை உடனடியாக திரும்ப கிடைப்பது இல்லை. ஏற்கனவே பல மாதங்களாக பம்ப் ஆபரேட்டர்களுக்கு சம்பளம் பாக்கியுள்ள நிலையில் ஊராட்சியின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியாமலும், நிறைவேற்றப்பட்டதற்கு உரிய தொகையை பெற முடியாமலும் தவித்து வருகிறோம். கோடைகாலத்திலும் மாதந்தோறும் வழங்கப்படும் பொது நிதி ஒரு சில ஊராட்சிகளில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மற்ற ஊராட்சிகளில் வழங்க மறுக்கின்றனர். எனவே தமிழக ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் போதுமான நிதியை ஒதுக்கீடு செய்து, பொதுமக்களின் அடிப்படை பணிகளை மேற்கொள்ளும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: