கான்கிரீட் தளம் அமைக்கும் பணி கைவிடப்பட்டதா? பல மாதங்களாக கிடப்பில் போட்ட அதிகாரிகள் வேலூர் பழைய பாலாறு பாலத்தில்

ேவலூர், ஏப்.26:வேலூர் பழைய பாலாற்று பாலத்தின் அடியில் சிமென்ட் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பழைய பாலாற்று பாலம் கடந்த 1975ம் ஆண்டு கட்டப்பட்டது. தமிழக-ஆந்திர மாநில இணைப்பு பகுதியாக இருக்கும் இந்த பாலத்தில் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இதில் கடந்த சில ஆண்டுகளாக பாலத்தின் பக்கவாட்டு தடுப்புச்சுவர்கள் ஆங்காங்கே உடைந்து காணப்பட்டது. அதனை அவ்வப்போது சரிசெய்யும் பணியும் நடந்தது. அதேபோல் பாலத்தில் மின்கம்பங்கள் உடைந்தும் சேதமடைந்தது.இதற்கிடையில் கடந்த 2015ம் ஆண்டு பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாலத்தின் அடியில் உறுதித்தன்மைக்காக அமைக்கப்பட்டிருந்த சிமென்ட் கான்கிரீட் தளம் அடித்து செல்லப்பட்டது. இதனால் பாலம் வலுவிழந்து, வாகனங்கள் செல்லும்போது பாலத்தில் அதிர்வுகள் ஏற்பட்டன. இதுகுறித்த புகாரின்பேரில் சில மாதங்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் பாலத்தை ஆய்வு செய்தனர். பாலத்தை சீரமைக்க ₹4.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது.

அதன்படி, பாலத்தின் மேல் பகுதியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, புதிய தார்தளமும் அமைக்கப்பட்டது. ஆனால் பாலத்தின் அடிபகுதியில் கான்கிரீட் தரைமட்ட தளம் அமைக்கும் பணி நடந்தது. பாதி பணிகள் முடிவடைந்த நிலையில் மீதி பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதாவது, பாலாற்றில் வெள்ளம் வந்தால் அதிகளவில் தண்ணீர் அரிப்பு ஏற்படும் பகுதியில் 3 அடுக்கு கற்கள் போட்டு அதன்மேல் சிமென்ட் தரைத்தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அந்த பணி பல மாதங்களாக அதே நிலையில் உள்ளது. அதிகாரிகள் அதை கண்டும் காணாமல் இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மீண்டும் மழை பெய்தால் அவை அனைத்தும் அரித்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை உடனடியாக முழுமையாக சீரமைக்க மாவட்ட நிர்வாகமும், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: