தரமற்ற இறைச்சி விற்பனை செய்தால் நடவடிக்கை அதிகாரிகள் எச்சரிக்கை கோடைகால தொற்றுகளால் பறவை, விலங்குகள் பலியாகும்

வேலூர், ஏப்.26:

கோடைகால தொற்றுகளால் பறவை, விலங்குகள் பலியாகும் வாய்ப்பு அதிகம் என்பதால், தரமற்ற இறைச்சி விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், குறிப்பிட்ட வைரஸ் தொற்றுகள் மற்றும் அதிகப்படியான வெப்பத்தால் பண்ணைகளில் உள்ள கோழிகள் பலியாக வாய்ப்புள்ளது. இவ்வாறு பலியாகும் கோழிகளை இறைச்சிக்காக பயன்படுத்துவதால், மனிதர்களுக்கும் தொற்று பாதிப்புகள் ஏற்படும். எனவே, தரமற்ற இறைச்சி விற்பனை செய்யப்படுவது குறித்து சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்புத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆடு, மாடு ஆகியவற்றின் இறைச்சி விற்பனையில் விதிமீறல்கள் நடப்பதாக தெரிகிறது. எனவே கோழி, ஆடு, மாடு மற்றும் மீன் போன்றவற்றின் இறைச்சி விற்பனையையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது:பண்ணைகளில் தொற்று பாதிப்புகளால் பலியாகும் கோழிகளை இறைச்சிக்காக பயன்படுத்தக்கூடாது. அதேபோல், கடைகளில் விற்பனையாகாமல் மீதமாகும் இறைச்சியை பதப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்நிலையில், ஒரு சிலர் பண்ணைகளில் பலியாகும் கோழிகளை இறைச்சிக்கு பயன்படுத்துவதாகவும், பழைய இறைச்சியை விற்பனை செய்வதாகவும் புகார்கள் வருகிறது.

எனவே, தரமற்ற இறைச்சி விற்பனை குறித்து திடீர் ஆய்வு நடத்தப்படும். அதன்படி, உரிய ஆவணங்கள் இல்லாமல் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு இறைச்சியை விற்பனைக்கு கொண்டு செல்லக்கூடாது. அவ்வாறு கொண்டு செல்லப்படும் இறைச்சியை பறிமுதல் செய்வதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இறைச்சிக்காக பயன்படுத்தப்படும் ஆடு, மாடு உள்ளிட்டவை ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். கால்நடை மருத்துவரின் சான்றிதழ், உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகளின் ஒப்புதலோடுதான் ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகளை இறைச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் இருக்கிறது. ஆனால், இந்த விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பதில் பல்வேறு சிக்கல்கள் நீடிக்கிறது. இந்த சிக்கல்களை தீர்க்க ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. மீன் விற்பனையை பொறுத்தவரை, வேலூர் மாவட்டத்தில் பார்மலின் ரசாயனம் பயன்படுத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீன் இறைச்சி விற்பனையை கண்காணிக்கும் முழு அதிகாரம் மீன்வளத்துறை அதிகாரிகளுக்குதான் இருக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.பாக்ஸ்...இறைச்சி கழிவுகளால் தொற்று அபாயம்இறைச்சி கழிவுகளை குறிப்பிட்ட ஆழத்துக்கு பள்ளம் தோண்டி புதைக்க வேண்டும் என்பது விதி. மேலும் ஆடு, மாடுகளை பொது இடங்களில் வெட்டக்கூடாது. இறைச்சியில் வைரஸ், பாக்டீரியா தொற்றுகள் தாக்கும் வகையில் திறந்தவெளியில் தொங்கவிடக்கூடாது என்பது உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளது. ஆனால், பெரும்பாலானோர் இறைச்சி கழிவுகளை திறந்தவெளியில் கொட்டிவிடுகின்றனர். இதை சாப்பிடும் நாய் உள்ளிட்ட விலங்குகள் சொறி பிடித்து தொற்று நோய்களால் பாதிக்கப்படுகிறது. இந்த தொற்று மனிதர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது. எனவே, இறைச்சி கழிவுகளை வெளியேற்றுவதில் விதிமுறைகளை கையாள வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.அதேபோல், கடைகளில் இருந்து இறைச்சி கழிவுகளை தனியாக சேகரித்து அழிக்க உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்று இறைச்சி கடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: