தண்டுமாரியம்மன் கோயிலில் கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி

சத்தியமங்கலம், ஏப்.26:  சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் உள்ள தண்டுமாரியம்மன் கோயில் திருவிழாவில் கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடக்கும் தண்டுமாரியம்மன் கோயில் விழா கடந்த ஏப்ரல் 11ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவையொட்டி, கோயில் முன் நடப்பட்ட  கம்பத்திற்கு  பெண்கள்  மஞ்சள் பூசி வழிபட்டனர். இதைத்தொடர்ந்து தினமும் சிறப்பு வழிபாடு, அலங்கார பூஜைகள் நடந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அம்மன் அழைப்பும், நேற்றுமுன்தினம்  காலை பக்தர்கள்  குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்தும், முளைப்பாரி எடுத்தும் அம்மனை வழிபட்டனர். இந்நிலையில் நேற்று  மாலை கோயில் முன்பு நடப்பட்ட கம்பத்தை சுற்றிலும்  நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மேளதாள இசைக்கேற்றபடி கம்ப ஆட்டம் ஆடினர்.

கம்ப ஆட்டத்தை பார்ப்பதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோயில் வளாகத்தில் திரண்டனர். இரவு 8 மணியளவில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடந்தது. இளைஞர்கள் பிடுங்கப்பட்ட கம்பத்தை சுமந்து சென்று பவானி ஆற்றில் விட்டனர்.  இன்று (26ம் தேதி) திருவிளக்கு பூஜையும், நாளை மஞ்சள்நீராட்டு விழாவும் நடக்கிறது.

Related Stories: