×

ஈரோட்டில் இரவு நேரத்தில் பல மணி நேரம் மின்வெட்டு

ஈரோடு, ஏப்.26: ஈரோட்டில் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதால், தூக்கத்தை இழந்து மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.தமிழகம் மின்மிகை மாநிலம் என்றும், தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகவும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கூறி வருகின்றனர். ஆனால், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அறிவிக்கப்படாமல் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக முன்னறிவிப்பு இல்லாமல் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. ஈரோடு பகுதியில் பகல் நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாகவும், இரவு நேரத்தில் 3 மணி நேரத்திற்கு மேலாகவும் மின்வெட்டு ஏற்படுகிறது.

ஈரோட்டில் நேற்று முன்தினம் இரவு 8.45 மணிக்கு திடீர் மின்வெட்டு ஏற்பட்டது. இது, இரவு 11 மணி வரை நீடித்தது. மின்சாரத்தை நம்பி தொழில் செய்வோர்களும், விசைத்தறியாளர்களும் பல மணி நேரம் மின்வெட்டால் பாதிப்படைந்துள்ளனர்.இது குறித்து மக்கள் கூறுகையில்,`பகல் நேரத்தில் கோடை வெயில் சுட்டெரிப்பதாலும், இரவு நேரத்தில் அதிக உஷ்ணத்தாலும் வீட்டில் இருப்பது மிக சிரமம். மின்வாரியத்தினர் எவ்வித முன்னறிவிப்பு இல்லாமல் தினமும் 4 மணி நேரத்திற்கும் மேலாக மின் விநியோகத்தை நிறுத்தி வைக்கின்றனர். இதனால், முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து தரப்பு மக்களும் தூக்கம் இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, சீரான மின் விநியோகத்தை மின்வாரியம் வழங்க வேண்டும்’என்றனர்.


Tags : Erode ,
× RELATED ஈரோட்டில் அனுமதியின்றி பிசினெஸ்...