உள்ளாட்சி தேர்தல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

ஈரோடு, ஏப். 26:உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஈரோடு மாவட்டத்தில் வார்டு வாரியாக வாக்குசாவடி வரைவு பட்டியல் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படுகிறது.  ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, பவானி, கோபி, சத்தி, புஞ்சைபுளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகள், 14 ஊராட்சி ஒன்றியங்கள், 42 பேரூராட்சிகள், 225 கிராம ஊராட்சிகள் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. மக்களவை தேர்தல் முடிவுகளையடுத்து தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை ஊரக வளர்ச்சித் துறை, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி துறையினர் செய்து வருகின்றனர்.

குறிப்பாக, வாக்குசாவடி பட்டியல் தயாரிக்கும் பணிகள் முடிந்தது. வரைவு வாக்குசாவடி பட்டியல் கலெக்டர் அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகங்களிலும், பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.இப்பட்டியல் மீது ஆட்சேபணை மற்றும் கருத்துகள் இருந்தால், தேர்தல் நடத்தும் அதிகாரிகளான நகராட்சி ஆணையர், வட்டார வளர்ச்சி அலுவலர், பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோரிடம் எழுத்துபூர்வமாக பொதுமக்கள் தெரிவித்தால் உரிய மாற்றங்கள் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.ஈரோடு மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் வரைவு வாக்குசாவடி பட்டியல் மற்றும் வார்டுகள் பிரிக்கப்பட்டதையடுத்து வரைவு வாக்காளர் பட்டியல் ஆகியவை ஒரு வாரகாலத்திற்குள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: