காவிரி ஆற்றில் நாட்டு வெடிகளை வீசி மீன் பிடிப்போர் மீது நடவடிக்கை

பவானி, ஏப். 26:  காவிரி ஆற்றில் நாட்டு வெடிகளை வீசி மீன் பிடிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பவானி, அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பவானி புதிய பாலம் தொடங்கி காவிரி கரையோரப் பகுதிகளான பெரும்பள்ளம், சின்னப்பள்ளம், நெரிஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை, சிங்கம்பேட்டை, காடப்பநல்லூர், கேசரிமங்கலம் ஆகிய பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் அரசு அனுமதி பெற்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆற்றில் தண்ணீர் குறைந்த காலங்களில் பரிசல் மூலமாக் சென்று வலை வீசி மீன்களை பிடித்து வருகின்றனர். தற்போது தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதால் ஆற்றில் ஆங்காங்கே தண்ணீர் குட்டை போல் தேங்கி உள்ளது.

இதனால், தண்ணீரில் நாட்டுவெடிகளை வீசி கும்பல் மீன்களை பிடித்து வருகிறது. இவ்வாறு நாட்டு வெடிகள் தண்ணீருக்குள் வீசப்பட்டு வெடிக்கும்போது ஏற்படும் அதிர்வில் பெரிய மீன்கள் முதல் மீன் குஞ்சுகளை வரை இறந்துவிடும். வெடி வீசி பெரிய மீன்களை பிடிக்கும் கும்பல், சிறிய மற்றும் உணவுக்கு பயன்படாத பிற மீன்களை அப்படியே விட்டு சென்றுவிடுகிறது. இதனால், இறந்த மீன்கள் தண்ணீரில் அழுகி துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. நேற்று அம்மாபேட்டை அடுத்துள்ள ஊமாரெட்டியூர் சுடுகாட்டு துறை காவிரி ஆற்றில் ஒரு கும்பல் நாட்டுவெடியை பற்றவைத்து தண்ணீருக்குள் வீசியது. அப்போது ஏற்பட்ட வெடிசத்தத்தை கேட்ட மீனவர்கள், பரிசலில் நாட்டுவெடி வீசிய பகுதிக்கு விரைந்தனர். மீனவர்கள் வருவதைக் கண்ட அந்த கும்பல் தப்பியோடியது.

அங்கு, மீன்பிடி கும்பல் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிளை கைப்பற்றி அம்மாபேட்டை போலீசாருக்குத் தகவல் தெரிவித்து மீனவர்கள் ஒப்படைத்தனர். இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ஆற்றில் நாட்டுவெடிகளை வீசி சட்டவிரோதமாக மீன் பிடிப்து அதிகரித்துள்ளது. இதனால், மீன் கொல்லப்படுவதோடு, மீன் இனமே அழியும் நிலை ஏற்படும். இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், காவிரி ஆற்றில் உள்ள மீன்வளத்தை நம்பியுள்ள 300க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, நாட்டுவெடிகளை சட்டவிரோதமாக வீசி மீன் பிடிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: