மாணவர் சேர்க்கை அதிகரிக்க வீடு வீடாக சென்று பெற்றோர்களிடம் விழிப்புணர்வு

ஈரோடு, ஏப்.26: தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. இதில், அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலணி, சீருடை, நோட்டு புத்தகம், கணினி, சைக்கிள் வரை இலவசமாக வழங்கப்படுகிறது.

இதில், தொடக்கப்பள்ளியுடன் கூடிய அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் சேர்க்கை சதவீதத்தை உயர்த்த பள்ளி ஆசிரியர்கள் சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2018-19 கல்வியாண்டு முடிந்து கடந்த 22ம் தேதி முதல் மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளை சேர்க்கை சதவீதத்தை உயர்த்தும் வகையில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் உள்ள வசதிகள் குறித்து பள்ளி செல்லா குழந்தைகளின் பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

ஈரோடு எஸ்கேசி ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியை சுமதி தலைமையில் நேற்று அப்பள்ளியின் ஆசிரியர்கள் பள்ளியின் சுற்றுப்புற பகுதிகளில் வீடு வீடாக சென்று குழந்தைகளின் பெற்றோர்களிடமும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.  இந்த விழிப்புணர்வின் போது, ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் உள்ள வசதிகள் குறித்தும், மாணவ-மாணவிகளின் விருப்பத்திற்கு ஏற்ப தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி கல்வி பயிலும் வசதி, அரசின் சலுகை, உதவித்தொகை, திறமையை ஊக்குவிக்க தனித்திறன் வகுப்பு  உள்ளிட்ட வசதிகளை பெற்றோர்களிடம் கூறி விழிப்புணர்வில் ஈடுபட்டனர்.  இத்துடன் அரசு பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்க்க வலியுறுத்தும் வகையில் துண்டுபிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

Related Stories: