திட்ட பணிகளால் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

ஈரோடு, ஏப்.26: ஈரோடு மாநகராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக காவிரி ஆற்றில் இருந்து 9 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக, காவிரி ஆற்றில் உள்ள பம்பிங் ஸ்டேசன் பகுதியில் தண்ணீர் எடுக்கப்பட்டு சுத்திகரிப்பு செய்து குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.அதன்படி, மாநகராட்சி பகுதி மக்களுக்கு தினமும் 54 எம்.எல்.டி தண்ணீர் எடுக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு வார்டு பகுதியில் குடிநீர் தேவைக்கேற்ப சப்ளை செய்யப்படுகிறது. இதுதவிர, காவிரி ஆற்று குடிநீர் சப்ளை இல்லாத பகுதிகளில் லாரி மூலம் மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கி வருகிறது. மாநகராட்சி பகுதியை பொருத்தவரை 2 நாள் முதல் அதிகபட்சமாக வாரம் ஒருமுறை என குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

மக்களுக்கு தூய்மையான குடிநீர் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டத்திற்காக, பவானி அருகே வரதநல்லூர் என்ற இடத்தில் காவிரி ஆற்றில் தண்ணீர் எடுக்கப்பட்டு மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளுக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக மாநகராட்சி பகுதிகளில் ஆங்காங்கே சாலைகள் தோண்டப்பட்டு குழாய் பதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக ரோட்டில் செல்கிறது.  குறிப்பாக, ஈரோடு சூரம்பட்டி, நல்லி மருத்துவமனை ரோடு, பெரிய அக்ரஹாரம், பவானி மெயின்ரோடு, அசோகபுரம், சென்னிமலை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் நேரங்களில் உடைந்து போன குடிநீர் குழாய் வழியாக தண்ணீர் வெளியேறி வருகிறது. குடிநீர் திட்டப்பணியின்போது உடைந்து போன குழாய்களை கண்டறிந்து அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: