போதிய பாதுகாப்பு இல்லாததால் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் பூங்கா திறந்தவெளி பாராக மாறும் அவலம் பக்தர்கள் அவதி

கும்பகோணம், ஏப். 26: போதிய பாதுகாப்பு இல்லாததால் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் பூங்கா திறந்தவெளி பாராக மாறி வருகிறது. இதனால் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.கும்பகோணம் அடுத்த தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் உலக புகழ்பெற்ற யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டதாகும். அடிக்கு 1008 சிற்பங்கள் என்ற பெருமையுடையதாகும். மேலும் 7 ஸ்வரங்களின் படிக்கட்டுகள், ரதம் போன்ற கோயிலின் உள்பகுதிகள் அமைந்த சிறப்புடையதாகும். உலகளவில் கட்டிட கலைகளில் பெயர் பெற்றுள்ளதால் விழா காலங்கள் மட்டுமில்லாமல் தினம்தோறும் 100க்கும் மேற்பட்ட கட்டிட தொழில்நுட்பத்தை பற்றி படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், வெளிமாநில, மாவட்ட மாணவர்கள் குறிப்புகளை எடுத்து செல்வர்.மேலும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து கோயில் வளாகத்தில் இளைப்பாறி விட்டு பிரகாரத்தில் உள்ள புல்தரைகளில் மதிய நேரத்தை பொழுதை கழித்து விட்டு மாலையில் சுவாமி தரிசனம் செய்வர். கடந்த சில நாட்களாக கோயில் வளாகத்தில் போதுமான பாதுகாப்பு இல்லாததால் இரவு நேரங்களில் குடிமகன்களின் கூடாரமாக மாறி வருகிறது. பூங்காவில் குடிமகன்கள் குடித்து விட்டு பாட்டில்களை உடைத்து போட்டு விடுகின்றனர்.

இதனால் பூங்காவில் தினம்தோறும் நடைபயிற்சி செல்பவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் பிரகாரத்தில் நடந்து வரும் சமூகவிரோத செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், தாராசுரம் கோயில் வளாகத்தில் கடந்த மாதங்களாக போதுமான பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. சில இளைஞர்கள் மதுபானங்களை வாங்கி வந்து குடித்து விட்டு கோயில் ஓரங்களில் உள்ள வீடுகளில் தூக்கி வீசி விடுகின்றனர். எனவே தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் வளாகத்தில் நடைபெறும் சமூக விரோத செயல்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: