தஞ்சை மணிமண்டபத்தில் அடிப்படை வசதி செய்யாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் ஓராண்டாக காலியாக உள்ள சுற்றுலா அலுவலர் பணியிடம்

தஞ்சை, ஏப். 26: தஞ்சை மணிமண்டபத்தில் போதுமான அடிப்படை வசதிகள் செய்யாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். கடந்த ஓராண்டாக சுற்றுலா அலுவலர் பணியிடம் காலியாகவே உள்ளது.தஞ்சையில் 1995ம் ஆண்டு உலக தமிழ் மாநாடு நடந்தபோது தஞ்சை- புதுக்கோட்டை சாலையில் நவநீதபுரம் ரவுண்டானா அருகே மணிமண்டபம் அமைக்கப்பட்டது. இந்த மணிமண்டபத்தை சிங்கப்பூர் அமைச்சர் டத்தோசாமிவேல் திறந்து வைத்தார். இந்த மணிமண்டபத்தில் ராஜராஜசோழன் அகழ்வைப்பறை ஏற்படுத்தப்பட்டது.இதில் சோழ சாம்ராஜ்யத்தின் அனைத்து நிகழ்வுகளும் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சுழற்படிக்கட்டு அமைத்து 5 அடுக்கு மாடி கொண்டதாக வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மணிமண்டபத்தின் வளாகத்தில் மரம், செடிகள் வளர்க்கப்பட்டு பார்ப்பதற்கே ராஜராஜசோழனின் பெருமையை நமக்கு உணர்த்தும் வகையில் இருந்தது. காலபோக்கில் இந்த மணிமண்டபத்தில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் இங்கு வரும் சுற்றுலா பயணிகளை ஏமாற்றமடைய செய்யும் வகையில் சென்றுவிட்டது. இதற்கு காரணமாக தஞ்சை மாவட்டத்தில் சுற்றுலா அலுவலர் பணியிடம் கடந்த ஓராண்டுக்கும் மேலாக காலியாகவே உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுற்றுலா அலுவலர் தான், தஞ்சை மாவட்டத்தையும் கூடுதலாக கவனித்து கொள்கிறார். இதனால் சுற்றுலா வளர்ச்சி தொடர்பான எந்த ஒரு பணிகளும் தஞ்சை மாவட்டத்தில் நடக்கவில்லை.

தஞ்சை சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா வளர்ச்சி குழுமம் என்ற ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர். இந்த வளர்ச்சி குழுமம் சார்பில் தினசரி பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. இவ்வாறு சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் தஞ்சை மணிமண்டபம், தஞ்சை கலெக்டர் அலுவலக அருங்காட்சியகம், தொல்காப்பியர் சதுக்கம், தஞ்சை ராஜாமிராசுதார் ஆஸ்பத்திரி இலவச சைக்கிள் ஸ்டாண்ட், காந்திஜி சாலை கட்டண வாகனம் நிறுத்துமிடம் ஆகியவை பராமரிப்பு செய்யப்படுகிறது.

இவ்வாறு சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் பராமரிப்பு செய்யப்படும் மணிமண்டபம் நுழைவு வாயில் கட்டணமாக ரூ.5 வசூல் செய்யப்படுகிறது. அதே நேரத்தில் இலவச கழிப்பறையாக இருந்தது தற்போது கட்டண கழிவறையாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு உரிய ரசீது கொடுப்பதில்லை. அதேபோல் மணிமண்டபத்தை பார்க்க வருவோர்கள் தங்களது இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனத்தை நிறுத்த போதுமான இடமில்லை. இதனால் மணிமண்டபத்தின் அருகில் சாலையில் வாகனத்தை நிறுத்தி சென்று விடுகின்றனர். இவ்வாறு நிறுத்தி செல்லப்படும் இருசக்கர வாகனம் பல நேரங்களில் திருடி செல்லப்படுகிறது. அதேபோல் மணிமண்டபத்தில் உள்ளே சிறுவர்கள் குதித்து விளையாடுவதற்காக வசதி செய்யப்பட்டள்ளது. இதில் ஒரு குழந்தை 5 நிமிடம் குதித்து விளையாட கட்டணம் ரூ.10 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. எந்த ஒரு அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கும் மணிமண்டபத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணம், ராஜராஜன் அகழ்வைப்பறையை பார்க்க கட்டணம், சிறுவர்கள் விளையாடுவதற்கு கட்டணம், கழிவறையை பயன்படுத்தினால் கட்டணம் என்று எல்லாவற்றுக்கும் கட்டணம் தான்.

ஆனால் நுழைவு கட்டணம் தவிர மற்ற எல்லா கட்டணங்களும் தனியார் வசம் உள்ளது. இதற்கு சுற்றுலா அலுவலர் தான் காரணம். மணிமண்டபத்தில் தினம்தோறும் வசூலாகும் தொகையில் குறிப்பிட்ட தொகையை பெற்று கொண்டு தனியார் வசம் இதை பராமரிப்பு செய்யுமாறு விடப்பட்டுள்ளது. எப்படி நுழைவு கட்டணம் வசூல் செய்வதை சுற்றுலா வளர்ச்சி குழுமத்திடம் விடப்பட்டுள்ளதோ அதேபோல் இந்த மணிமண்டபத்தின் உள்ள மற்றவைகளை வசூல் செய்வதையும் சுற்றுலா வளர்ச்சி குழுமம் வசம் விடலாம்.

அவ்வாறு செய்தால் மாவட்ட நிர்வாகத்துக்கு பணம் கிடைப்பதுடன் கட்டணமும்  குறைவாக இருக்கும். தமிழகத்தின் உள்ள சிறந்த சுற்றுலா தலங்களில் தஞ்சைக்கு என்று தனி இடம் உண்டு. ஆனால் இங்கு ஓராண்டு காலத்துக்கும் மேலாக பொறுப்பு சுற்றுலா அலுவலர் செயல்படுவது தான் வேதனையாக இருப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர். இந்த பொறுப்பு சுற்றுலா அலுவலரும் தஞ்சைக்கு வராமல் சுற்றுலா தலங்களில் வசூலாகும் தொகையின் பங்குகளை மட்டும் பெற்று கொண்டு இருப்பதால் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இருக்க வேண்டிய ராஜராஜன் மணிமண்டபம் இன்று போதுமான அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருக்கிறது என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: