×

பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் மாநகராட்சி கலையரங்கம் விரைந்து புதுப்பிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தஞ்சை, ஏப். 26: தஞ்சையில் போதிய பராமரிப்பின்றி பயன்பாடற்ற நிலையில்  மாநகராட்சி திறந்தவெளி கலையரங்கம் சமூக விரோத செயல்களின் பிறப்பிடமாக மாறி வருகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் அதை தடுத்து நிறுத்தி கலையரங்கத்தை புதுப்பிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை நகராட்சி தலைவராக பெத்தண்ணன் 1977ம் ஆண்டு வரை பதவி வகித்தார். அவர் தலைவராக இருந்தபோது அவரது பெயரில் 1971ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி அப்போதைய தஞ்சை எம்எல்ஏ நடராசன் தலைமையில் நடந்த விழாவில் தமிழக கல்வி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த நெடுஞ்செழியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பெத்தண்ணன் கலையரங்கத்தை திறந்து வைத்தார். திறந்த வெளியில் பறந்து விரிந்த இக்கலையரங்க திடலில் 4,000 பேர் கூடும் அளவுக்கு இடவசதி உள்ளது. உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலுக்கும், சிறுவர்களின் சிறந்த பொழுதுபோக்கு இடமாக திகழும் சிவகங்கை பூங்காவுக்கும் இடையில் பெத்தண்ணன் கலையரங்கம் அமைந்துள்ளது. கலையரங்கம் திறக்கப்பட்ட காலத்தில் பல்வேறு மேடை நாடகங்கள், நாட்டிய நிகழ்ச்சிகள், கலைவிழாக்கள் என தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. ஆனால் முறையான பராமரிப்பில்லாத காரணத்தால் கலையரங்கத்தில் நடத்தப்பட்டு வந்த நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைய துவங்கி தற்போது சமூக விரோத செயல்களின் கூடாரமாகிவிட்டது.

2000ம் ஆண்டில் இக்கலையரங்கத்தை அப்போதைய நகர்மன்ற தலைவர் இறைவன் நிர்வாகத்தில் புதுப்பித்தனர். இதையடுத்து பல்வேறு நிகழ்ச்சிகள் அங்கு நடத்தப்பட்டன. அப்போது தான் தஞ்சை நகரில் இதுபோன்ற ஒரு கலையரங்கம் இருக்கிறது என்பதே பல வெளியூர்காரர்களுக்கு தெரிந்தது. இது சில மாதங்கள் மட்டும் தான் தொடர்ந்தது. பிறகு மீண்டும் பராமரிப்பின்றி கலையரங்கம் பழைய நிலைக்கு வந்துவிட்டது. தஞ்சாவூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையிலும் போதிய வருமானம் இல்லாததாலும், நகராட்சி நிர்வாகத்தால் உரிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததாலும் கலையரங்கம் தற்போது அதன் கலையை இழந்து முட்புதர்களும், செடி கொடிகளும் மண்டி கிடக்கிறது. கலையரங்க நுழைவு வாயில்கள் எந்நேரமும் திறந்து கிடப்பதால் இரவு மட்டுமின்றி பகலிலும் மது அருந்தும் திறந்தவெளி பாராக மாறி விட்டது. மேலும் சமூக விரோத செயல்களின் பிறப்பிடமாக மாறி வருகிறது. சமீபத்தில் ஒருநாள் இரவு குடிமகன்களிடையே தகராறு ஏற்பட்டு மோதலாக வெடிக்கும் சூழல் ஏற்பட்டது. இதேநிலை தொடர்ந்தால் விரைவில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விடும் அபாயமும் உள்ளது.

மேலும் சுற்று பகுதியிலுள்ள ஆடுகள், மாடுகள் இக்கலையரங்க வளாகத்தில் மேய்ந்து திரிகின்றன. சிறப்புமிக்க தஞ்சை நகருக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் பெத்தண்ணன் கலையரங்கையும் புதுப்பித்து அதில் நிகழ்ச்சிகள் நடத்தி புத்துயிர் ஊட்ட வேண்டுமென சமூக ஆர்வலர்களும், தஞ்சை நகர மக்களும் நீண்ட நாள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதுகுறித்து முன்னாள் நகர்மன்ற தலைவர் இறைவன் கூறும்போது, பெத்தண்ணன் கலையரங்கம் புகழ்பெற்ற பல நிகழ்ச்சிகள், நாடகங்கள் நடந்த இடம். அவசர நிலையின்போது திமுக தலைவராக இருந்த கருணாநிதி விடுதலை அடைந்து வரும்போது அவரது தலைமையில் விடுதலை நாள் விழா இங்கு நடத்தப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயற்குழு கூட்டத்தை இக்கலையரங்கத்தில் அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த ஜி.கே.மூப்பனார் நடத்தினார். 2000ம் ஆண்டு இங்கு நடத்தப்பட்ட நகர்மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தமிழகம் முழுவதிலிருந்தும் நகர்மன்ற தலைவர்கள் பங்கேற்றனர்.

பெரிய கோயிலில் தீவிபத்து நடந்தபோது இக்கலையரங்கத்தில் இருந்து தான் திமுக தலைவர் கருணாநிதி சம்பவ இடத்தை பார்வையிட்டார். இத்துடன் இலவச திருமண நிகழ்ச்சிகள் இங்கு நடந்துள்ளது. பல்வேறு மேடை நாடகங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடந்த இடம். பள்ளி, கல்லூரிகளின் ஆண்டு விழாக்கள் இங்கு நடத்தப்பட்டுள்ளன. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கலையரங்கம் உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் அதன் இயல்பை இழந்துபோய் உள்ளது வேதனையளிக்கிறது.மேலும் தற்போது தஞ்சை மாநகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளதுடன் ஸ்மார்ட் சிட்டி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள நிலையில் இக்கலையரங்கத்தை உடனடியாக புதுப்பித்து மக்களுக்கு பயன்படும் நிகழ்வுகள் இக்கலையரங்கத்தில் நிகழ்த்தப்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நகர மக்களின் விருப்பமாகும் என்றார்.

Tags : corporation ,
× RELATED மாநகராட்சி மேயர், கமிஷனர் வரிசையில் நின்று வாக்களிப்பு