×

2 காஸ் சிலிண்டர் இருப்பதாக தவறான பதிவால் ரேஷனில் மண்ணெண்ணை வழங்க மறுப்பு பொதுமக்கள் புலம்பல்

க.பரமத்தி, ஏப்.26:  குடும்ப அட்டையில் தவறான பதிவை சீரமைத்து உடனே மண்ணெண்ணை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்து இரண்டு ஆண்டுகளாகியும் நடவடிக்கை இல்லாததால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் ஏராளமான குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் அரவக்குறிச்சி வட்டத்தில் சுமார் 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. இதன் கீழ் மொத்தம் 125 நியாய விலைக்கடைகளும் இதில் சுமார் 87 முழு நேர கடைகளும் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் இயங்கி வரும் நியாயவிலைக் கடைகள் ஒன்றியத்தில் உள்ள அந்தந்த பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கட்டுப்பாட்டில் கீழ் வெவ்வெறு பகுதியில் நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது.
குடும்ப அட்டைகளில் சர்க்கரை கார்டு, மண்ணெண்ணெய் கார்டு, அரிசி கார்டு, என பிரிக்கப்பட்டுள்ளது அரிசி கார்டு என்றால் மாதம் 20 கிலோ வரை அரிசி பெறலாம் இதேபோல் சர்க்கரை கூடுதலாகவும் மண்ணெண்ணெய் தேவைப்படுவோர் அந்த கார்டுக்கு கூடுதல் அளவு மண்ணெண்ணெயும் பெற்று வருகின்றனர்.

ரேஷன் கடைகளில் அரிசியை தவிர துவரம், உளுத்தம்பருப்பு, பாமாயில், மசாலா பொருட்கள் அடங்கிய பாக்கெட் போன்றவை குறைந்த விலையில் முன்பு திமுக ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அரிசியை தவிர பிற பொருட்கள் ரேஷனில் கிடைப்பது அரியதாக உள்ளது. மேலும் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் குடும்ப அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் போது ஒன்றியத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் 90சதவீத குடும்ப அட்டை பயனாளிகளுக்கு 2 காஸ் சிலிண்டர் வைத்திருப்பதாக தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மண்ணெண்ணை வழங்க இயலாது, எனவே பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் விற்பனையாளர் இதற்கு ஒரு சிலிண்டர் மட்டுமே இருப்பதாக காஸ் சிலிண்டர் நிறுவனத்தில் இருந்து சான்றிதழ் பெற்று அவற்றை அரவக்குறிச்சி வட்ட வழங்கல் அலுவலத்தில் வழங்குபடி பயனாளிகளை கேட்டுகொண்ட நிலையில், பொதுமக்களும் காஸ் சிலிண்டர் நிறுவனத்தில் உரிய ஆவணம் பெற்று அவற்றை அதிகாரிகளிடம் வழங்கினோம். ஆனால் இரண்டு ஆண்டுகளாகியும் தவறான பதிவை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மண்ணெண்ணை பெற முடியாமல் கடும் அவதிக்குள்ளாகியுள்ளதாக பொதுமக்கள் பலரும் புலம்பி வருகின்றனர். எனவே இனியாவது குடும்ப அட்டையில் தவறான பதிவை சீரமைத்து உடனே மண்ணெண்ணை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்து இரண்டு ஆண்டுகளாகியும் நடவடிக்கை இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் கவலையடைந்துள்ளனர்.


Tags : Cause Cylinder Disappointment for Public Relief ,
× RELATED தோகைமலை அருகே முள்காட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டில் விற்றபெண் கைது