×

ஆசிய தடகளத்தில் வெள்ளி பதக்கம் வென்றதுபோல் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் வீரர் ஆரோக்கியராஜிவ்வின் தாயார் பேட்டி

லால்குடி, ஏப். 26: நடைபெற உள்ள ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று நமது நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என ஆசிய தடகள போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற  லால்குடி ஆரோக்கியராஜிவ்வின் தாயார் லில்லி சந்திரா கூறினார். திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த வழுதியூர் கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் - லில்லி சந்திரா  ஆகியோரது மகன்  ராணுவ வீரர் ஆரோக்கியராஜிவ். தற்போது கத்தார் நாட்டில்  நடைபெறும் மிக்சிங் ரிலே மற்றும் ஆண்களுக்கான தொடர் ஓட்டப் பந்தயத்தில்  வெற்றி பெற்று இரண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார். அவரது குடும்பம் லால்குடி சரவணா நகரில் வசித்து வருகின்றனர்.

இதுகுறித்து  ஆரோக்கியராஜிவ்வின் தாயார் லில்லி சந்திரா  கூறுகையில், எங்களது சொந்த கிராமம் லால்குடியை அடுத்த வழுதியூர் கிராமம்.  எனது கணவர் விளையாட்டு வீரர், உயரம் தாண்டுதலில் மாநில அளவில் நடந்த போட்டி களில்  கலந்து கொண்டுள்ளார். மேலும் நாங்கள் விவசாய கூலி வேலை செய்து பிழைத்து வந்ததால்  மேலும் போட்டிகளில் கலந்துகொள்ள முடியவில்லை.  இந்த நிலையில் எனது மூத்த மகன் ஆரோக்கியராஜிவ் வழுதியூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 5ம் வகுப்பு வரையிலும்  லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு மற்றும் திருச்சியில் ஜோசப்  கல்லூரியில்  கல்லூரி படிப்பு முடித்தவுடன்,  கஷ்டப்பட்ட நேரத்தில் விளையாட்டில்  எனது கணவர் முக்கியத்துவம் கொடுத்து வந்தார். மேலும் 2010ம் ஆண்டு ஆரோக்கியராஜிவ் ராணுவத்தில் சேர வாய்ப்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து   ராணுவத்தில் இருந்து கொண்டே கடந்த  ஆண்டுகளில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டி போட்டிகளில் தங்கம் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெள்ளி  பதக்கம் பெற்றார். மேலும் தற்போது கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் தடகள போட்டியில்  ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து மிக்சிங் ரிலே மற்றும் ஆண்களுக்கான தொடர் ஓட்டப் பந்தயத்தில் இரண்டு வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார்.  இது எங்களுக்கு மிகவும் சந்தோஷத்தை தந்துள்ளது. வரும் நாட்களில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில்  தங்கம் வென்று நமது நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே எங்கள் குடும்பத்தின் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார் .

மேலும் கடந்த  ஆண்டு தான் ஆரோக்கியராஜிவ்க்கு திருமணம் நடந்துள்ளது. மனைவி அனுசுயா திருச்சியில் பட்டப் படிப்பு படித்து வருகிறார். ஆரோக்கியராஜிவ்வின் தம்பி  டேனியேல் ரஞ்சித் இவரும் ராணுவத்தில் பணிபுரிகிறார். இவரும்  தடகள விளையாட்டு வீரர். தங்கை எலிசபெத் ராணி வாலிபால்  விளையாட்டு வீரர். மாநில அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார். ஆரோக்கியராஜிவ்வின் குடும்பமே விளையாட்டு  போட்டிகளில் பங்கு பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Asian Athletic ,Olympic Games ,
× RELATED ஒலிம்பிக் போட்டிக்கு விஷ்ணு சரவணன் தகுதி