தொட்டியம் அருகே 6 நாட்களாக மின்சாரமின்றி பொதுமக்கள் கடும் தவிப்பு

தொட்டியம், ஏப்.26:   தொட்டியம் அருகே மின்னத்தம்பட்டியில் கடந்த 6 நாட்களாக மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள்  தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். தொட்டியம் தாலுகா காமலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட மின்னத்தம்பட்டி காலனியில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த வாரம் பெய்த மழை மற்றும் சூறாவளி காற்றில் மின் கம்பம்  உடைந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உடைந்த மின்கம்பத்தை சீரமைத்து மின்சாரம் வழங்குமாறு பொதுமக்கள் மின்வாரிய அலுவலர்களிடம் பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் உடைந்த மின்கம்பத்தை சரி செய்ய வேண்டுமானால் பொக்லின் இயந்திரம் கொண்டு வந்து குழி பறித்து புதிய கம்பம் நட வேண்டும்.

எனவே அதற்காகும் செலவை காலனி மக்கள் ஏற்க வேண்டும் என மின் வாரிய அலுவலர்கள் சிலர் தெரிவித்ததாகவும், இதையடுத்து காலனி மக்களிடையே வீட்டிற்கு 200 வீதம் வசூலித்து சுமார் 6 ஆயிரம் ரூபாய் மின்வாரிய ஊழியர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து நேற்று மின்னத்தம்பட்டி காலனிக்கு வந்த மின்வாரிய துறையினர் 6 நாட்களுக்குப் பிறகு மின்சாரம் வழங்குவதற்கான பணிகள் துவங்கியுள்ளனர். இதுகுறித்து அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த மின்வாரிய ஊழியர்களிடம்  கேட்டதற்கு நாங்கள் பொதுமக்களிடமிருந்து பணம் வாங்கவில்லை என்று தெரிவித்தனர். எது எப்படியோ எங்களுக்கு உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டும் என்பதே காலனி குடியிருப்பில் வசிக்கும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: