1,500 வடமாநில பணியாளர்களை வெளியேற்றக்கோரி பொன்மலை பணிமனை முன் மே 3ல் மறியல் போராட்டம் தமிழ் தேசிய பேரியக்கம் முடிவு

திருச்சி, ஏப். 26:  வடமாநில பணியாளர்கள் 1,500 பேரை வெளியேற்றக்கோரி பொன்மலை பணிமனை முன் மே 3ல் மறியல் போராட்டம் நடத்திட தமிழ் தேசிய பேரியக்கம் முடிவு செய்துள்ளது. இது குறித்து தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் திருச்சியில் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் செயல்படக்கூடிய இந்திய அரசின் தொழிற்சாலைகளான ரயில்வே, அஞ்சல், வருமானவரி, ஜிஎஸ்டி, கணக்கு தணிக்கை, துறைமுகம், விமான நிலையம் உள்ளிட்ட 18 துறைகளின் அலுவலகங்களின் பணிக்கு திட்டமிட்டு தமிழ்நாட்டு இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். வட மாநிலங்கள் மற்றும் இதர மாநிலத்தவர் 90 சதவீதம் வேலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். திருச்சி ரயில்வே கோட்டத்தில் பழகுனர் பணிக்கு பொன்மலை பணிமனையில் சமீபத்தில் நேர்காணல் நடந்தது.

இதற்கு 1,765 பேர் அழைக்கப்பட்டனர். இதில் 100 பேர் தமிழர்கள். ஆனால் 300 பேருக்கு வேலை வழங்கப்பட்டதில், ஒருவர் கூட தமிழர்கள் இல்லை. பொன்மலை பணிமனையில் இப்போது 3,000 பேர் வேலை பார்க்கின்றனர். இதில் 1,500 பேர் வடமாநிலத்தவர்கள். முறையாக 10 சதவீதம் வெளி மாநிலத்தவர்களுக்குதான் வேலை வழங்கி இருக்க வேண்டும். எனவே 300 வெளி மாநில பணியாளர்களை தவிர மற்ற 1,200 பேரையும் உடனே பணியில் இருந்து நீக்க வேண்டும். மற்ற மத்திய அரசின் அலுவலகங்களிலும் 90 சதவீதம் வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மே 3ம் தேதி பொன்மலை பணிமனை முன் தமிழக தேசிய பேரியக்கம் சார்பில் அதன் தலைமை செயற்குழு உறுப்பினர் அருணபாரதி தலைமையில் மறியல் போராட்டம் நடைபெறும். இவ்வாறு மணியரசன் கூறினார்.

Related Stories: