சேலத்தில் வரவேற்பு காவலர்களால் பெறப்பட்ட 751 மனுதாரர்களிடம் மீண்டும் விசாரணை

சேலம், ஏப்.26:  சேலத்தில் வரவேற்பு காவலர்களால் புகார் மனு பெறப்பட்ட 751 மனுதாரர்களிடம், மீண்டும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இதில் மாமூல் வசூலித்த போலீசார் கலக்கம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில், சேலம் மாநகரில் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் வரவேற்பு காவலர் பிரிவு தொடங்கப்பட்டது. புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து, மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் இந்த பிரிவை தொடங்கினார். இதற்காக 22 பெண் போலீசாருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன. புகார் மனுவை பெற்றுக்கொண்டு, உடனடியாக கம்ப்யூட்டரில் பதிவு செய்து, இதுகுறித்து இன்ஸ்பெக்டர்களிடம் தெரிவிப்பது போன்ற பணிகள் ஒதுக்கப்பட்டது.

இதன்படி ஜனவரி மாதம் 751 புகார் மனுக்களும், பிப்ரவரியில் 1,400 மனுக்களும், மார்ச்சில் 1,880 புகார் மனுக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே வரவேற்பு பெற்று உள்ள நிலையில், காவல்நிலையத்தில் பணியாற்றும் அதிகாரிகள், எஸ்ஐக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக அனைத்து வழக்குகளை பதிவு செய்யும் பட்சத்தில், கிரைம் ரேட் ஏறும். இரண்டாவதாக பஞ்சாயத்து பேசி பணம் வசூல் செய்வது நின்று போனது. இதனால் அந்த வரவேற்பு காவலர்களுக்கும், போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதை தெரிந்து கொண்ட கமிஷனர் அவர்களை அழைத்து அறிவுரை வழங்கினார். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் காவல்நிலையம் வந்து புகார் கொடுத்த 751 பேருக்கும், வரவேற்பு பிரிவில் உள்ள அதிகாரிகள் போன் மூலமாக பேசி நீங்கள் கொடுத்த புகாரில் திருப்தி இருக்கிறதா? வழக்கு எவ்வாறு முடித்து வைக்கப்பட்டது? எதற்கும் செலவு செய்துள்ளீர்களா? என கேட்டுள்ளனர். அவ்வாறு திருப்தி இல்லாத மனுதாரர்களுக்கு, மே 1ம் தேதி சிறப்பு கூட்டத்திற்கு கமிஷனர் ஏற்பாடு செய்துள்ளார். இதனால் கட்டபஞ்சாயத்து மூலம் வசூலித்த போலீஸ் அதிகாரிகள், கலக்கத்தில் உள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘வழக்கமாக மனுக்களை பெறாமல் விரட்டி விடுவது, அப்படியே பெற்றாலும் அதற்காக பெரும் தொகையை பெற்றுக்கொள்வது போன்ற சம்பவம் நடந்து வந்தது. தற்போது வரவேற்பு காவலர்களால் அவை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடந்து வருகிறது. மே 1ம்தேதி, திருப்தி இல்லாத மனுதாரர்களிடம் விசாரணை நடக்கிறது,’ என்றனர்.

Related Stories: