சேலம் மாவட்ட வனப்பகுதியில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி

சேலம், ஏப்.26: சேலம் மாவட்டத்தில் வனப்பகுதியில் உள்ள வன விலங்குகளின் கணக்கெடுப்பு பணி, இன்று முதல் (26ம் தேதி) 3 நாட்களுக்கு நடைபெறும் என மாவட்ட வன அலுவலர் பெரியசாமி கூறினார். சேலம் மாவட்டத்தில் சேர்வராயன் வடக்கு, தெற்கு, கல்வராயன், ஏற்காடு, மேட்டூர் என 9 வனச்சரகங்கள் உள்ளது. மாவட்டத்தின் பெரும்பாலான வனப்பகுதி மலைகள் சார்ந்த பகுதியாகவும், 1,26,540 ஹெக்டேர் பரப்பளவு கொண்டதாகவும் உள்ளது. வனப்பகுதியில் புள்ளிமான், கடம்ப மான், கரடி, நரி மற்றும் காட்டெருது போன்ற விலங்குகளும், பறவைகளும் காணப்படுகிறது. மிகப்பெரிய வனப்பகுதியை கொண்டிருந்தாலும் புலி, யானை போன்ற விலங்குகள் இல்லை. இதனால், சேலம் மாவட்ட வனப்பகுதியில் என்னென்ன வனவிலங்குகள் உள்ளன, அரிய விலங்குகள் ஏதேனும் இருக்கிறதா என்று கணக்கிடும் பணி நடக்கிறது.

இது குறித்து மாவட்ட வன அலுவலர் பெரியசாமி கூறியதாவது: சேலம் மாவட்ட வனப்பகுதியில் வசிக்கும் வனவிலங்குகள், பறவைகளின் எண்ணிக்கையை கண்டறியவே இந்த கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது. இதில் வனத்துறையினர், வனச்சரகர்கள் மற்றும் தன்னார்வலர்கள்  ஈடுபடுகின்றனர். முதல் நாளான இன்று (26ம் தேதி), வன விலங்குகளின் கணக்கெடுப்பு பற்றிய பயிற்சி வகுப்புகளும், அடுத்த 2 நாட்கள் வன விலங்குகளின் கணக்கெடுப்பு பணியும் நடைபெறும். இந்த கணக்கெடுப்பின் மூலமாக, வனவிலங்குகளின் எண்ணிக்கை மற்றும் வாழும் இடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை பாதுகாக்கவும் மற்றும் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தவும் ஏதுவாக இருக்கும். இவ்வாறு மாவட்ட வன அலுவலர் கூறினார்.

Related Stories: