பனமரத்துப்பட்டியில் கடும் தட்டுப்பாடு சீரான குடிநீர் வழங்க வேண்டும்

சேலம், ஏப்.26: பனமரத்துப்பட்டி ஒன்றியத்திலுள்ள 20 ஊராட்சிகளுக்கு வரும் காவிரி குடிநீர் சீராக கிடைக்காததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் பாரப்பட்டி, அம்மாப்பாளையம், பெரமனூர் என்று 20 ஊராட்சிகள் உள்ளன. அனைத்து ஊராட்சிகளிலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த 20 ஊராட்சி பகுதிக்கும் காவிரி குடிநீர் திட்டமான இருப்பாளி குடிநீர் திட்டத்தில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இங்குள்ள அனைத்து பகுதிக்கும் ஒரே நேரத்தில் தண்ணீர் திறக்கப்படுதில்லை. சுழற்சி முறையில் தண்ணீர் திறந்துவிடப்படுவதால் அனைத்து பகுதிக்கும் 3ல் இருந்து 5 நாட்களுக்கு ஒரு முறையே தண்ணீர் கிடைப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பனமரத்துப்பட்டி பொதுமக்கள் கூறுகையில், ‘‘20 ஊராட்சிகளையும் பிரித்து சுழற்சி  முறையில் தண்ணீர் திறக்கப்படுகிறது. ஏதோவொரு பிரச்னையால் காவிரி தண்ணீர் நிறுத்தப்பட்டால் அன்றைக்கு தண்ணீரே கிடைக்காது. மேலும், கடைசியில் உள்ள ஊராட்சிக்கு தண்ணீர் சரிவர செல்வதில்லை. அப்படியே வந்தாலும் கூட மிகக் குறைந்தளவே வருகிறது. இதனையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் திறக்கப்படும் தண்ணீர் எங்களுக்கு போதுமானதாக இல்லை.

ஊராட்சியில் போடப்பட்ட ஆழ்துளை கிணறுகளிலும் நீர்மட்டம், வறட்சியால் 700 அடியில் இருந்து, 800 அடிக்கும் கீழ் சென்றுவிட்டது. இதனால் உப்புத்தண்ணீரும் எங்களுக்கு கிடைக்கவில்லை. உப்புத் தண்ணீரையே விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். எனவே, இருப்பாளி குடிநீர் திட்டத்தில் திறக்கப்படும் தண்ணீரை அனைத்து பகுதிக்கும் முழுமையாக சென்று சேரும் வகையில் விநியோகிக்க வேண்டும். மேலும், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: