இனப்பெருக்க காலம் முடிந்ததால் மூக்கனேரி சரணாலயத்தை விட்டு சென்ற வெளிநாட்டு பறவைகள்

சேலம், ஏப்.26: சேலம் கன்னங்குறிச்சி மூக்கனேரி சரணாலயத்தில் முகாமிட்டிருந்த வெளிநாட்டு பறவைகள், இனப்பெருக்க காலம் முடிந்ததால் அங்கிருந்து பறந்துசென்றது. சேலம் அருகேயுள்ள கன்னங்குறிச்சி மூக்கனேரி சுமார் 39 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு  கடந்த 2010ல் பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தற்போது வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்க காலம் முடிந்து, உள்நாட்டு பறவைகள் இன்பெருக்கம் அதிகரித்து வருகிறது. இது குறித்து சேலம் பறவையியல் கழகத்தை சேர்ந்தவர்கள் கூறியதாவது: சேலம் மூக்கனேரியில் ஏராளமான மரங்கள் உள்ளன. இதில் பறவைகள் தங்கிச் செல்லும் வகையில் ரம்மியான சூழல் உள்ளது. இதனால் ஆண்டுதோறும் கோடையில் வலசைபோதல் நிகழ்வின் மூலமாக நூற்றுக்கணக்கான வெளிநாடு, உள்நாட்டு பறவைகள் இனப்பெருக்கம் செய்ய வந்துச்செல்கின்றன.

தற்போது வெளிநாட்டு பறவைகளின் இன்பெருக்கம் காலம் முடிந்ததால் அவை இருப்பிடத்தை காலி செய்துவிட்டன. தற்போது உள்நாட்டு பறவை இனங்களான சாம்பல் நாரை, கொக்கு, நீர்பறவை, குயில்கள் ஆகியவை இனப்பெருக்கத்தில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் மூக்கனேரி பகுதியில் நூற்றுக்கணக்கான உள்நாட்டு பறவைகள் காண முடிகிறது. பொதுவாக ஒவ்வொரு பறவைக்கு இனப்பெருக்க காலம் வேறுபடும் என்பதால் இந்த பறவைகள் நீண்ட நாட்கள் இங்கு தங்கி இருக்கும். எனவே, பட்டாசு வெடித்தல், இரைச்சல் தரும் சப்தம் எழுப்புதல் உள்ளிட்ட இடையூறுகளை தவிர்க்க வேண்டும். இவ்வாறு பறவையியல் கழகத்தினர் கூறினர்.

Related Stories: