பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்

காரைக்கால், ஏப். 25: கடலில் இன்று முதல் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாமென காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறை எச்சரித்துள்ளது. இது குறித்து  மீன்வளத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. அவ்வாறு உருவாகும் முன்பு கடல் கொந்தளிப்போடு காணப்படும். எனவே, மீனவர்கள் இன்று முதல் இந்திய பெருங்கடலில் பூமத்திய ரேகை பகுதியில், தென்மேற்கு வங்ககடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது, மேற்கண்ட பகுதியில் இன்று 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். அதேபோல் 26ம் தேதி 40லிருந்து 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

மேலும் 27ம் தேதி 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே பாரம்பரிய படகுகளில் மேற்குறிப்பிட்ட நாட்களில், மீன் பிடிக்க செல்ல வேண்டாமென இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. மீனவர்கள் தங்கள் மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை கடற்கரை ஓரங்களில் நிறுத்தாமல், பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஒவ்வொரு மீனவ கிராம பஞ்சாயத்தாரும், ஒலிபெருக்கி மூலம் மீனவர்களுக்கு அறிவுறுத்தும் படியும் இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: