சுட்டெரிக்கும் வெயிலால் உற்பத்தி பாதிப்பு புதுவையில் காய்கறி விலை கடும் உயர்வு

புதுச்சேரி, ஏப். 25:  சுட்டெரிக்கும் வெயிலால் காய்கறி உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுவைக்கான காய்கறி வரத்து குறைந்ததுடன் அவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. புதுச்சேரிக்கு தேவையான காய்கறிகள் ஆந்திரா, பெங்களூரு, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லாரிகள் மூலம் கொண்டுவரப்படுகிறது. இந்த காய்கறிகள் பெரிய மார்க்கெட், முத்தியால்பேட்டை, நெல்லித்தோப்பு, சாரம், ரெட்டியார்பாளையம், வில்லியனூர், முதலியார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகின்றது. பொதுவாக கோடை காலத்தில் காய்கறிகளின் உற்பத்தி குறைந்து, அவற்றின் விலை கிடுகிடுவென உயர்வது வழக்கம். அந்த வகையில், தற்போது கோடைக்காலம் துவங்கியுள்ளதால், கடந்த மாதம் வரை குறைவான விலையில் இருந்த பல காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.25 முதல் ரூ.30 வரையும், 15 கிலோ கொண்ட ஒரு பாக்ஸ் தக்காளி ரூ.380க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், கடந்த மாதம் ரூ.20 முதல் ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் எனப்படும் நாட்டு வெங்காயம், ரூ.40 முதல் ரூ.45க்கும் விற்பனையானது. இதன் விலை மேலும் அதிகரிக்கும் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்ட கத்திரிக்காய் ரூ.10 உயர்ந்து ரூ.30க்கும், 120க்கு விற்பனை செய்யப்பட்ட இஞ்சி ரூ.30 உயர்ந்து ரூ.150க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இஞ்சி ஒரு கிலோ ரூ.80ஆக இருந்தது. இரண்டே மாதங்களில் இஞ்சியின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிகரித்துள்ளது. இதுதவிர, பீன்ஸ் - ரூ.70க்கும், பீட்ரூட் ரூ.30 முதல் ரூ.35 வரையும், குடை மிளகாய் ரூ.50க்கும், மிளகாய் ரூ.40க்கும், கேரட் ரூ.35 முதல் ரூ.40 வரையும், சவ்சவ் - ரூ.50க்கும், நூக்கல் - ரூ.40க்கும், காலிபிளவர் - ரூ.35க்கும், உருளை - ரூ.20 முதல் ரூ.25 வரையும், கோஸ், கருணை, முள்ளங்கி தலா ரூ.30க்கும், ஜாம் தக்காளி - ரூ.35க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் சீசன் காய்கறியான மாங்காய், வெள்ளரி, முருங்கைக்காய் போன்றவை விலை குறைவாக உள்ளது. நேற்று ஒரு கிலோ ஒட்டு மாங்காய் ரூ.10க்கும், நாட்டு மாங்காய் - ரூ.10க்கும், கொத்தவரங்காய் - ரூ.20க்கும், பாகற்காய் - ரூ.25க்கும், வெள்ளரி ரூ.20க்கும், வெண்டைக்காய் - ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் விலை அதிகமுள்ள காய்கறிகளை கால் கிலோ, அரை கிலோ என்ற அளவிலும், விலை குறைவாக உள்ள காய்கறிகளை ஒரு கிலோ, 2 கிலோ என்ற அளவிலும் வாங்கி சென்றனர்.

இதுகுறித்து காய்கறி கடை வியாபாரிகள் கூறுகையில், கோடைக்காலம் துவங்கிவிட்டதால் தண்ணீர் பிரச்னை ஏற்படும். இதனால் காய்கறி உற்பத்தி பாதிக்கப்படுவதுடன் விளைச்சலும் குறைந்து விடுகிறது. இதன் காரணமாக, புதுவைக்கான காய்கறி வரத்து குறைந்து, அவற்றின் விலையும் அதிகரிக்கிறது. கோடைக்காலமானது ஜூன் வரை நீடிக்கும் என்பதால் அதுவரை வெளியூரில் இருந்து வரும் காய்கறிகளின் விலை குறைய வாய்ப்பில்லை, என்றனர். இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், காய்கறிகள் விலை உயர்வால் பல நேரங்களில் காய்கறி மார்க்கெட் வெறிச்சோடி கிடக்கிறது. பழங்களின் விலையும் உயர்வு

கோடைக்காலத்தை யொட்டி பொதுமக்களின் கவனம் குளிர்பானங்கள் பக்கம் திரும்பியுள்ளது. புதுவையை பொறுத்தவரை பெப்சி, கோக் போன்ற குளிர்பானங்கள் அருந்துவதை பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர். மாறாக, பழச்சாறு அருந்துவதையே அதிகம் விரும்புகின்றனர். இதனால் பழங்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

நேற்று பெரிய மார்க்கெட்டில் ஒரு கிலோ ஆப்பிள் ரூ.150க்கும், மாதுளை ரூ.100க்கும், சாத்துக்கொடி ரூ.60க்கும், ஆரெஞ்சு ரூ.100க்கும், பச்சை திராட்சை ரூ.80க்கும், கருப்பு திராட்சை ரூ.80க்கும், அண்ணாச்சி ரூ.60க்கும், கொய்யா ரூ.35க்கும், சப்போட்டா ரூ.35க்கும், பப்பாளி ரூ.20க்கும், செவ்வாழை ரூ.60க்கும், பூவன் வாழை ரூ.40க்கும், கற்பூர வள்ளி ரூ.40க்கும், விற்பனை செய்யப்படுகிறது. தற்போது மாம்பழ சீசன் என்பதால் பல ரகங்களிலான மாம்பழகங்கள் மார்க்கெட்டில் விற்பனைக்கு குவிந்துள்ளன. இதில் செந்தூரா மற்றும் ஒட்டு மாம்பழம் தலா ரூ.50க்கும், பங்கனப்பள்ளி ரூ.70க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் மற்றொரு சீசன் பழமான தர்பூசணி கிலோ ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories: