மீன்பிடி தடைகாலம் அமல் வரத்து குறைந்ததால் மீன் விலை உயர்வு

மரக்காணம், ஏப். 25: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் அழகன்குப்பம்,  வசவன்குப்பம், கைப்பாணிகுப்பம், மண்டவாய்புதுக்குப்பம், அனுமந்தைகுப்பம்,  கூனிமேடு குப்பம் உள்பட 19 மீனவர்கள் கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில்  உள்ளவர்கள் விசைப்படகு மற்றும் கட்டு மரங்களை பயன்படுத்தி கரையோரம்,  ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்கின்றனர். இங்கு அதிகளவில் சங்கரா, பாறை,  கனவா, மத்தி, வஞ்சரம், இறால், நண்டு போன்ற மீன்கள் பிடிக்கப்பட்டு புதுவை,  கேரளா ஆகிய பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். தமிழக கடல் பகுதியில்  ஏப்ரல், மே மாதங்களில் மீன்களின் இனப்பெருக்க காலம் என்று மீன்  ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனால் அழிந்து வரும் மீன்களின் இனத்தை  பாதுகாக்க ஆண்டுதோறும்  ஏப்ரல் 14ம்தேதி நல்ளிரவில் இருந்து மே 29ம்தேதி  இரவு வரையில் 45 நாட்களுக்கு விசை படகுகளை பயன்படுத்தி ஆழ்கடலில் மீன்  பிடிக்க அரசு தடை விதிப்பது வழக்கம்.

ஆனால் கடந்த ஆண்டில் இருந்து இந்த  தடைகாலத்தை ஏப்ரல் 14ம்தேதியில்  இருந்து ஜூன் 15ம்தேதி வரையில் 61  நாட்களாக அரசு நீடித்து அறிவித்துள்ளது. இந்த தடைகாலத்தில் விசைப்படகு  மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லமாட்டார்கள். இதனால் மார்க்கெட்டிற்கு  மீன்கள் வரத்தும் வெகுவாக குறைந்து விட்டது. இதன் காரணமாக சிறிய வகை  மீன்களின் விலையும் உயர்ந்து விட்டது. இந்த தடை காலத்தில் மீனவர்கள்  தங்களது மீன் பிடி வலை மற்றும் விசைப்படகு உள்ளிட்ட உபகரணங்களை பராமரிப்பு  செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: