கழிவுநீர் கால்வாய் பணியின்போது குழாய் உடைந்ததால் விழுப்புரத்தில் குடிநீர் விநியோகம் பாதிப்பு: பொதுமக்கள் சாலைமறியல்

விழுப்புரம், ஏப். 25:  விழுப்புரத்தில் கழிவுநீர் கால்வாய்க்காக பள்ளம் தோண்டியபோது குடிநீர் குழாய் உடைந்ததால், குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் காலிகுடங்களுடன்சாலை மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம் நகரில் நான்கு முனை சந்திப்பிலிருந்து சவிதா தியேட்டர் பேருந்து நிறுத்தம் வரை தற்போது சாலை விரிவாக்கப்பணிகள் நடந்து வருகின்றன. இதனிடையே சாலையின் இருபுறமும் பள்ளம் தோண்டப்பட்டு வாய்க்கால்கள் கட்டப்பட்டு வருகின்றன. நேற்று காலையில் கிழக்குபாண்டிரோடு தாயுமானவர் தெருபகுதியில் வாய்க்காலுக்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக குடிநீர் குழாய் உடைந்ததால், அங்குள்ள பள்ளத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வீடுகளுக்கு குடிநீர் சப்ளை இல்லாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதனை நீண்டநேரமாகியும் சரி செய்யாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் விழுப்புரம்-புதுச்ேசரி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த நகர் காவல்நிலைய போலீசார், நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் நீண்டநாட்களாக பள்ளம் தோண்டப்பட்டு கிடப்பில் உள்ளது. இதுவரை சரிசெய்யவில்லை. எங்கள் வீட்டிற்கு கூட செல்ல முடியவில்லை. தற்போது குடிநீர் குழாய் உடைந்துவிட்டதால் குடிநீருக்கு எங்கு செல்வது என்று கேட்டனர்.அதற்கு நகராட்சி ஊழியர்கள், வாய்க்கால் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு சாலைகள் போடப்படும். குடிநீர் குழாய்கள் மாலைக்குள் சரிசெய்யப்படும். தற்போது டேங்கர் மூலம் குடிநீர் சப்ளைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டுச் சென்றனர். இதனால் விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: