சின்னசேலம் வட்டாரத்தில் தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம் காலிகுடங்களுடன் காடுகாடாக அலையும் மக்கள்

சின்னசேலம், ஏப். 25: சின்னசேலம்  ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுவதால் மக்கள் காலி குடங்களுடன் காடு காடாக அலைகின்றனர். இப்பிரச்னைக்கு உடனடி தீர்வு காண மாவட்ட ஆட்சியர்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். சின்னசேலம் ஒன்றியத்தில் கடத்தூர், எலியத்தூர், தெங்கியாநத்தம்,  நமச்சிவாயபுரம், தென்செட்டியந்தல், தொட்டியம், நைனார்பாளையம், உலகியநல்லூர்,  ஈசாந்தை, நாட்டார்மங்கலம், வீமாமந்தூர், வீ.கிருஷ்ணாபுரம், வீ.அலம்பளம்  உள்ளிட்ட 50 கிராமங்கள் உள்ளன. சின்னசேலம் ஒன்றிய பகுதியில் கோமுகி அணையை  தவிர பெரிய அளவில் குளங்களோ, ஆறுகளோ இல்லை.

அதைப்போல சின்னசேலம் பகுதியில்  உள்ள ஏரிகள் கோடை காலங்களில் பெரும்பாலும் வறண்டே காணப்படும். இதனால் கோடை  காலமான மே மாதத்தில் சின்னசேலம் தாலுகாவுக்கு உட்பட்ட சின்னசேலம்,  கச்சிராயபாளையம், கல்வராயன்மலை பகுதிகளில் நிலவும் கடும் வறட்சியால் குடிநீர்  பற்றாக்குறை ஏற்படும். தற்போது போதிய மழையில்லாததால் சின்னசேலம்  தாலுகாவில் உள்ள ஆறு, குளம், ஏரி, கோமுகி அணை உள்ளிட்ட அனைத்து நீர்  நிலைகளுமே  வறண்டு காணப்படுகிறது. இத்தகைய கடும்வறட்சியால் நைனார்பாளையம், உலகியநல்லூர், ஈசாந்தை, நாட்டார்மங்கலம், மூங்கில்பாடி, பூசப்பாடி, எலவடி,  வீ.மாமந்தூர், வீ.கிருஷ்ணாபுரம், வீ.அலம்பளம் உள்ளிட்ட பல கிராமங்களில்  நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதால் அரசாங்க போர்வெல் கிணறுகளில் தண்ணீர்  கிடைப்பதில்லை. காரணம் 700அடி வரை போட சொன்ன போர்கள் எல்லாம் வெறும் 300  அடியில் மட்டுமே போடப்பட்டிருக்கும்.  

இதனால் இந்த கிராமங்களில் தற்போது  குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதாவது 3 நாளுக்கு ஒருமுறை, 4  நாளுக்கு ஒருமுறை என கிராமங்களில் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதனால்  நைனார்பாளையம் பொதுமக்கள் பேக்காடு, கடலூர் மாவட்டம் அரசங்குடி  வனப்பகுதியில் உள்ள போர்வெல்லுக்கு சைக்கிள், பைக்கில் காலி குடத்தை  கட்டிக்கொண்டு அலைகின்றனர். அதைப்போல வீமாமந்தூர், வீ.கிருஷ்ணாபுரம்,  வீ.அலம்பளம் போன்ற கிராமங்களை சேர்ந்த மக்கள் தண்ணீர் எடுக்க விவசாய  கிணற்றை தேடி காடு காடாக அலைகின்றனர். பூண்டி, அம்மையகரம் போன்ற  கிராமங்களில் குடிதண்ணீர் தட்டுப்பாட்டால் தினம் தினம் குழாயடி சண்டை நடக்கிறது. சின்னசேலம் தாலுகாவை சேர்ந்த  கிராம மக்கள், கல்வராயன்மலை  மக்கள் ஒரு வேளை உணவுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம், மாநிலம் விட்டு  மாநிலம் சென்று வேலை பார்த்த காலம்போய், தற்போது  குடிநீருக்கே காடு காடாக, ஊர் ஊராக  அலைய வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் வேடிக்கை பார்க்கும் சின்னசேலம்,  கல்வராயன்மலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அதை போக்க எந்த நடவடிக்கையும்  எடுக்க முன்வரவில்லை என பொதுமக்கள் புகார் எழுப்பியுள்ளனர்.

வடக்கநந்தல் உள்ளிட்ட பேரூராட்சிகளிலும், கிராம  ஊராட்சிகளிலும் பைப்லைன் சரி செய்ய செலவு, போர்வெல் போட்ட செலவு, கிணறு  ஆழப்படுத்திய செலவு என செலவு பட்டியல் நீண்டு ெகாண்டு, அரசு பணம்தான் விரயமாகிறதே தவிர மக்களுக்கு போதுமான அளவில் குடிநீர் கிடைத்தபாடில்லை. ஆகையால் மாவட்ட நிர்வாகம் சின்னசேலம் வட்டம், கல்வராயன்மலை பகுதியில்  குடிநீர் பிரச்னை உள்ள கிராமங்களை கண்டறிந்து அதற்கு தேவையான நிதியை  ஒதுக்கி, போர்க்கால அடிப்படையில் போர்வெல் கிணறுகளை கூடுதலாக ஆழப்படுத்திட  நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஒருசில கிராமங்களில் நல்ல நிலையில் இருக்கும்  குடிநீர் கிணறுகளையும் ஆழப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மக்கள் பல கட்ட  போராட்டங்களை நடத்தப்போவதாக எச்சரித்துள்ளனர். கிணறுகளை ஆழப்படுத்த கூடுதல் நிதி வடக்கநந்தல்  பேரூராட்சியில் கோமுகி ஆறு வறண்டு போன நிலையில் அக்கராயபாளையம்,  புதுகாலனி, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதி மக்களுக்காக தோண்டப்பட்ட கோமுகி  ஆற்றோர கிணற்றில் நீர்மட்டம் குறைந்து விட்டதால் தற்போது 2 நாளுக்கு  ஒருமுறை குடி தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு இந்த கிணற்றை அரசு  ஒதுக்கிய நிதியில் முறையாக ஆழப்படுத்தி இருந்தால் தற்போது தண்ணீர் பற்றாக்குறை  ஏற்பட்டிருக்காது.

அதைப்போல சின்னசேலம் பகுதியில் ஏற்கனவே  கூட்டுக்குடிநீர் திட்டத்தின்மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. தற்போது  அந்த திட்டம் முடங்கி விட்டதால், திறந்தவெளி கிணறு மற்றும் போர்வெல்  கிணறுகள் மூலம் குறைந்தது வாரம் ஒருமுறை என குடிநீர் சப்ளை செய்கின்றனர்.  ஆகையால் சின்னசேலம், வடக்கநந்தல் பேரூராட்சிக்கு குடிநீர் பிரச்னையை  தீர்க்க கூடுதல் நிதி ஒதுக்கி கிணறுகளை ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க  வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. குளம், ஏரிகளை தூர்வார வேண்டும் அரசு  குடிநீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் நீர்தேக்கங்களை கட்டுதல், குளங்களை, ஏரிகளை தூர் வாருதல் போன்ற எந்த திட்டத்தையும்   செயல்படுத்தவில்லை. கமிஷன் பார்க்கும் சாலைப்பணி, கட்டிடம் கட்டுதல் போன்ற   திட்டங்களுக்கே அதிக நிதி ஒதுக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊராட்சி ஒன்றியங்கள், கிராம  ஊராட்சிகளில்கூட குடிநீர் திட்டத்திற்கென போதிய அளவில் நிதியை  ஒதுக்கவில்லை. போர்வெல் பைப்லைனையும் ஆழமாக போடுவதில்லை. இதனாலேயே கோடை  காலம் என்றாலே தண்ணீர் பஞ்சமும் சேர்ந்து வருகிறது.

Related Stories: