காங்கயம்-சென்னிமலை சாலையில் குழாய் உடைந்து வீணாக ஓடிய குடிநீர்

காங்கயம்,ஏப்.25: காங்கயம் சென்னிமலை ரோட்டில் காவிரி  குழாய்  உடைந்து சாலையில் குடிநீர்  ஆறாக ஓடியதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். காங்கயம் நகரம் மட்டுமல்லாமல் கிராமங்களுக்கும் தற்போது பெரும்பாலும் காவிரி நீர் குழாய்கள் மூலம் தான் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது நிலவி வரும் கடுமையான வறட்சி காரணமாக நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து போர்வெல் தண்ணீர் வற்றி போனது. இதனால் இப்பகுதி மக்கள் பெரும்பாலும் காவேரி நீரையே நம்பியுள்ளனர். இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு சாலை விரிவாக்கத்தின் போது,ஆங்காங்கே சாலையோரங்களில் பதிக்கப்பட்டிருந்த குழாய்கள் உடைந்து அவ்வப்போது குடிநீர் வீணாகி வருவது வாடிக்கையாகி விட்டது. இதேபோல  காங்கேயம் சென்னிமலை ரோட்டில் உள்ள வாய்க்கால் மேடு அருகே சாலையோரம் பதிக்கப்பட்டிருந்த காவிரி குடிநீர் குழாய் உடைந்து கடந்த சில நாட்களாக  குடிநீர் சாலையில் வீணாகி ஓடி  பின்னர் அங்குள்ள கழிவு நீர்  கால்வாயில் கலந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் அதே இடத்தில் உடைந்த குழாய்  மேலும்  உடைப்பு ஏற்பட்டு குடிநீர் ஆறாக ஓடியது.இதுபற்றி தகவல் அறிந்த நகராட்சி பணியாளர்கள் மாலை 5 மணிக்கு சென்று குழாயில் குடிநீர் செல்வதை நிறுத்தினர்.அதன் பின்னர் பின்னர் உடைப்பு ஏற்பட்ட குழாயை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.ஆனாலும் பல லட்சம் குடிநீர் வீணானது.இதுகுறிதூது பொதுமக்கள் கூறியதாவது: தற்போது பல கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது.இந்நிலையில் சாலையோரங்களில் குழாய்  பதிப்பது,கேபிள் ஒயர்கள் பதிப்பது போன்ற பணிகள் நடக்கும் போது கவனக்குறைவு காரணமாக இப்படி குழாய்கள் சேதமாகி குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. வறட்சியான இந்த காலத்தில் இவ்வாறு குடிநீர்  வீணாகி வருவது  வேதனையை தருகிறது.இதற்கு அதிகாரிகளின் மெத்தன போக்குதான் காரணம் என்று குற்றம் சாட்டினார்

Related Stories: