கோவை தண்டுமாரியம்மன் கோயில் திருவிழா தீச்சட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திகடன்

கோவை, ஏப். 25:  கோவை தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி நேற்று பக்தர்கள் கரகம், தீச்சட்டி எடுத்து நேர்த்திகடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.  கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து அம்மனுக்கு அக்கினிச்சாட்டு, திருவிளக்கு வழிபாடு, சிம்ம வாகனம், குதிரை வாகனம், அன்ன வாகனம் திருவீதி உலா, திருவிளக்கு வழிபாடு ஆகியவை நடந்தது. நேற்று முன்தினம் அம்மன் திருக்கல்யாண உற்சவமும், மலர் பல்லக்கில் அம்மன் திருவீதி உலாவும் நடந்தது. இதனைதொடர்ந்து, நேற்று காலையில் பெரியகடை வீதியில் உள்ள கோனியம்மன் கோயிலில் இருந்து கரகம், தீச்சட்டி ஏந்தி பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.இதில் 7 ஆயிரம் பெண்கள் உள்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.

போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவின்பேரில், துணை கமிஷனர் பாலாஜி சரவணன் தலைமையில் 6 உதவி கமிஷனர்கள், போலீசார், சிறப்பு காவல்படை, ஊர்க்காவல் படையை சேர்ந்த 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவை தெற்கு தீயணைப்பு நிலையம் சார்பில் 2 தீயணைப்பு வண்டிகள் கோயில் அருகே நிறுத்தப்பட்டிருந்தன. ஊர்வலத்தை முன்னிட்டு கோவையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.  இன்று மாலை அம்மனுக்கு மகாஅபிஷேகம் நடக்கிறது.வரும் 28ம் தேதி இரவு 7 மணிக்கு நடக்கும் வசந்த உற்சவத்துடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.

Related Stories: