×

மத்வராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்1 வகுப்பில் ஆங்கில மீடியம் துவக்கம்

கோவை, ஏப்.25:  கோவை மத்வராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்1 வகுப்பில் ஆங்கில வழி கல்வி மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது.   கோவை மத்வராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ், ஆங்கில வழி கல்வி மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இதில், 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. பிளஸ்1 வகுப்பில் ஆங்கில வழி கல்வி இல்லை. இதனால், இப்பள்ளியில் ஆங்கில வழியில் படித்து முடிக்கும் மாணவர்கள் பிளஸ்1 வகுப்பிற்கு பிற அரசு பள்ளிகள் அல்லது தனியார் பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. இந்த பள்ளி கடந்த ஆண்டு பிளஸ்2 பொதுத்தேர்வில் 63 சதவீதம் தேர்ச்சி பெற்று மாவட்ட அளவில் கடைசி இடத்தை பிடித்தது. இதனால், பள்ளியில் மாணவர் சேர்க்கை மேல்நிலை வகுப்பில் குறைந்தது.  இந்நிலையில், பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்களின் தீவிர முயற்சியின் காரணமாக இந்த ஆண்டு மத்வராயபுரம் பள்ளி பிளஸ்2 பொதுத்தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது பத்தாம் வகுப்பில் ஆங்கில வழி கல்வி படித்து வரும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் பள்ளியில் பிளஸ்1 வகுப்பில் ஆங்கில வழி கல்வி துவங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.. இந்த கோரிக்கையை தொடர்ந்து, பள்ளியின் முதல்வர் மல்லிகா மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் நடப்பாண்டில் மத்வராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்1 வகுப்பில் ஆங்கில மீடியம் துவங்க அனுமதி கோரினார். மாணவர்கள் சேர்க்கை பொறுத்து அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தற்போது பிளஸ்1 வகுப்பில் கணினி அறிவியல், பொருளாதாரம், வணிகவியல், கணக்குபதிவியல் ஆகிய பாடங்களுக்கான ஆங்கில வழி மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.  இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மல்லிகா கூறுகையில்,”பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள ஆங்கில வழி மாணவர்கள், பெற்றோர் கோரிக்கையின் அடிப்படையில் பிளஸ்1 ஆங்கில வழி சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது. எங்கள் பள்ளி முழுவதும் மாணவ, மாணவிகள் பாதுகாப்பிற்காக கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கிளாஸ், காரத்தே பயிற்சி, யோகா பயிற்சி வழங்கப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையான பல்வேறு வசதிகள் இருக்கிறது. பள்ளியின் சிறப்பம்சங்கள், வசதிகள் குறித்து பெற்றோர்களிடம் தெரிவித்து வருகிறோம்” என்றார்.


Tags : class ,Mavvarayapuram Government Higher Secondary School ,
× RELATED பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும்...