பிளாஸ்டிக் உற்பத்தியை தடுக்க மறுப்பு

கோவை, ஏப்.25:  பிளாஸ்டிக் உற்பத்தியை தடுக்க  மாசுகட்டுப்பாட்டு வாரியத்தினர் முயற்சிக்கவில்லை என உள்ளாட்சிகள் புகார் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் 10,350 அனுமதி பெற்ற பிளாஸ்டிக்  தயாரிப்பு நிறுவனங்கள் செயல்படுகிறது. துணி, சணல், பேப்பர் பொருட்கைளை காட்டிலும்  பல மடங்கு அதிகமாக பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர், பிளாஸ்டிக்  கவர், கேரி பேக், பேப்பர் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதைதடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த ஜனவரி முதல் பிளாஸ்டிக் கேரி பேக் பொருட்கள் தமிழகத்தில் விற்க, தயாரிக்க கட்டாய தடை விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் கேரி பேக் பிளாஸ்டிக் நிறுவனங்களை கண்டறிய, உற்பத்தி விவரங்களை அறிய, நோட்டீஸ் வழங்க மாசு கட்டுபாட்டு வாரியம் இதுவரை  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தயாரிக்கும் சில நிறுவனங்கள் முறைகேடாக, அனுமதியின்றி ரகசியமாக இயங்கி வருவதாக தெரியவந்துள்ளது. எங்கே எந்த நிறுவனங்களில் ‘ஒன் யூஸ்’ பிளாஸ்டிக் தயாராகிறது என மாசு கட்டுபாட்டு வாரியத்தினர் ஆய்வு செய்து கண்டறிய முடியாத நிலையில் இருக்கிறார்கள். மாநில அளவில் 50க்கும் மேற்பட்ட கேரி பேக் தயாரிப்பு  நிறுவனங்கள் அனுமதியின்றி இயங்குவதாக தெரிகிறது. இவற்றை மாசு கட்டுபாட்டு வாரியத்தினர் கண்டறிந்து மூட நடவடிக்கை எடுக்கவில்லை. ரகசியமாக இயங்கும் நிறுவனங்களை கண்டுகொள்ளாமல், வெளி மாநிலங்களில் இருந்து 50 மைக்ரான் தடிமனிற்கும் குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் சப்ளையாகிறது.

இதை தடுக்கும் பொறுப்பு, அதிகாரம் எங்களுக்கு கிடையாது. போலீசார், வணிக வரி மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் தான் செய்யவேண்டும் என மாசு வாரியத்தினர் தட்டி கழிக்கும் நிலையிருக்கிறது. உள்ளாட்சி நிர்வாகத்தினர், ‘‘ வெளி மாநிலங்களில் இருந்து தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் வரவில்லை. உள்ளூரில் உற்பத்தியாகிறது. உற்பத்தியை தடுத்தால் தான் விற்பனையை முடக்க முடியும். பல ஆயிரம் கடைகளில் தொடர்ந்து ஆய்வு நடத்த முடியாது. பிளாஸ்டிக் பொருட்களை நீண்ட காலம் தொடர்ந்து கண்காணிக்க முடியாது. உற்பத்தியை தடுப்பது மட்டுமே இதற்கு தீர்வாக அமையும், ’’ என்றனர்.

Related Stories: