கோடை மழையையொட்டி சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள்

பொள்ளாச்சி, ஏப்.25:  பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்காளக பெய்த கோடை மழையால், மானவாரி பயிர் சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகியுள்ளனர்.  பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில், தென்னைக்கு அடுத்தப்படியாக மானாவாரி பயிர்களான மக்காசோளம்,  நிலக்கடலை, தட்டைபயிர் உள்ளிட்டவை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை, ஆடி மற்றும் தை பட்டத்தை எதிர்நோக்கி பயிர்கள் விதைக்கப்பட்டு குறிப்பிட்ட நாட்களில் அறுவடை செய்யப்படுகிறது.  இதில் இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்ததால், மானாவாரி பயிரிட விவசாயிகள் கோடை மழையை எதிர்நோக்கி இருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அவ்வப்போது தொடர்ந்து சில மணிநேரம் கோடை மழை பெய்தது. இதனால் விவாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதை தொடர்ந்து விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் மானாவாரி பயிர்களை விதைக்க துவங்கியுள்ளனர்.

 இதில் அதிகபடியாக நிலக்கடலை மற்றும் மக்காசோளம் விதைப்பு பணியை மேற்கொள்கின்றனர். சுற்றுவட்டாரத்தில் கோவிந்தனூர், சமத்தூர், பொன்னாபுரம், வடக்கிபாளையம், சூலக்கல், ராசக்காபாளையம், கோமங்கலம்புதூர், முத்தூர், நல்லிகவுண்டன்பாளையம், கோட்டூர் உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகள் மானாவாரி பயிர்களை பயிரிட தங்கள் விளை நிலங்களில் ஏர் உழும் பணியை தீவிரபடுத்தியுள்ளனர்.  நிலத்தை உழுதுசெல்ல டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், இன்னும் பல கிராமங்களில் மாடு பூட்டி ஏர்உழும் பணியினை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். கோடை மழை தொடர்ந்து பொழிந்தால், சாகுபடி செய்யப்படும் பயிர்கள் தளைக்க ஏதுவாக இருக்கும் என்று விவசாயிகள் பலர் கருத்து தெரிவித்தனர்.

Related Stories: