மத்திய அரசின் தேசிய திறனாய்வு தேர்வில் 251 மாணவ-மாணவிகள் வெற்றி

ஈரோடு, ஏப்.25:  மத்திய அரசின் தேசிய திறனாய்வு தேர்வு எழுதிய ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 251 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். பள்ளி படிப்பினை முடிக்கும் வரை இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்.மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை சார்பில் அரசு பள்ளிகளில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு தேசிய திறனாய்வு தேர்வு (என்.எம்.எம்.எஸ்) தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில், தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி படிப்பினை நிறைவு செய்யும் வரை மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என ஆண்டுக்கு ரூ.12ஆயிரம் நிதி வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி, தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதி தேசிய திறனாய்வு தேர்வு நடந்தது. இத்தேர்வினை 8ம் வகுப்பு படிக்கும் 6 ஆயிரத்து 695 மாணவ-மாணவிகள் எழுதினர். ஈரோடு மாவட்ட அரசு பள்ளிகளில் படிக்கும் தகுதியான மாணவ-மாணவிகளும் தேர்வு எழுதினர். இதற்கான முடிவுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 251 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று, மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்வில் பெருந்துறை ஒன்றியம் வீரணம்பாளையம் நடுநிலைப்பள்ளியை சேர்ந்த 21 பேர் தேர்வு எழுதியதில், 18 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: