கோவில்பட்டி, கழுகுமலை பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை: ஆயிரக்கணக்கான வாழைகள் நாசம்

கோவில்பட்டி, ஏப்.25: கோவில்பட்டி அருகே சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழையால் ஆயிரக்கணக்கான வாழைகள்சாய்ந்து சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். கோவில்பட்டி, கயத்தாறு சுற்று வட்டார பகுதிகளில் நேற்றுமுன்தினம் மாலை இடிமின்னலுடன் பலத்த கோடை மழை பெய்தது. மேலும் சூறாவளி காற்றும் வீசியது. இதில் கோவில்பட்டி அருகே முடுக்கலான்குளம், ஜமீன்தேவர்குளம் மற்றும் செட்டிக்குறிச்சி போன்ற கிராம பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிட்டிருந்த வாழைகள் சாய்ந்து சேதமடைந்தன. இன்னமும் ஒரு வாரத்தில் வாழைகளில் இருந்து குலைகள் அறுவடை செய்யப்பட இருந்த நிலையில், சூறாவளி காற்றால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வாழைகள் நாசமாகி விட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் சரியான பருவம் இல்லாத நிலையில், கிணற்றில் இருந்த தண்ணீரை கொண்டு வாழைகளை பயிரிட்டு இருந்த நிலையில் தற்போது சூறைக்காற்றால் முற்றிலும் சேதமடைந்து விட்டதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

சேதமடைந்த வாழைகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கழுகுமலை: கழுகுமலை அருகே உள்ள சுப்பிரமணியாபுரம் கிராமத்தில் சங்கரபாண்டியன் என்பவர் 3 ஏக்கர் பரப்பளவில் சுமார் 3000 வாழைகள் பயரிட்டுள்ளார். இவைகள் அனைத்தும் குலை தள்ளிய நிலையில் நேற்று முன்தினம் இப்பகுதியில் வீசிய சூறாவளிக்காற்றுக்கு 1800 வாழைகள் சாய்ந்து விழுந்தன. இதன் மதிப்பு 4.5 லட்சமாகும். தகவலறிந்து நேற்று அதிகாலை வேலாயுதபுரம் கிராம நிர்வாக அதிகாரி சுப்பையா, செட்டிகுறிச்சி வருமான வரி ஆய்வாளர் பொன்னம்மாள் ஆகியோர் வாழை தோட்டத்துக்கு சென்று சாய்ந்த வாழைகள் குறித்து கணக்கெடுத்தனர். இது குறித்து தோட்ட உரிமையாளர் சங்கரபாண்டியன் கூறுகையில், ‘மழையின்மை, நோய் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயம் ஆண்டுக்காண்டு நசிந்து வருகிறது. இதற்கிடையில் சூறைக்காற்று உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் தற்போது குலை தள்ளிய நிலையில் இருந்த வாழை பயிர்கள் சாய்ந்து சேதம் அடைந்துவிட்டன’ என்றார்.

Related Stories: