ஏரல் அருகே பெருங்குளத்தில் குளத்து சாலையோரம் தடுப்பு சுவர் இல்லாததால் விபத்து அபாயம்

ஏரல், ஏப். 25: ஏரல் அருகேயுள்ள பெருங்குளம் குளம் இப்பகுதியில் பரப்பளவில் பெரிய குளமாக இருந்து வருகிறது. இந்த குளத்தை நம்பி பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் நெல், வாழை விவசாயம் செய்து வருகின்றனர். ஏரலில் இருந்து சிவகளை, ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருநெல்வேலிக்கு செல்லும் பஸ் மற்றும் வாகனங்கள் அனைத்தும் பெருங்குளம் வழியாக வந்து குளத்து கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலை வழியாக சென்று வருகிறது. இதேபோல் தூத்துக்குடியில் இருந்து புதுக்கோட்டை, சாயர்புரம் வழியாக வைகுண்டத்திற்கு சென்று வரும் பஸ்களும் இந்த குளக்கரை சாலை வழியாக சென்று வருகிறது. மேலும் குளத்து கரையோரப் பகுதியில் அதிக அளவு விவசாய நிலங்கள் உள்ளதால் விவசாயிகள் தங்கள் வயல்களில் உள்ள வாழைத்தார்களை வெட்டி கொண்டு செல்வதற்கும், உரம் கொண்டு செல்லுவதற்கும் வாகனங்கள் இந்த குளத்து கரையோர சாலையை பயன்படுத்தி வருவதால் இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து அதிக அளவு நடந்து வருகிறது.

பெருங்குளம் வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் இங்குள்ள சிவன் கோயில் அருகே குளத்துக்கரை சாலையில் ஏறியவுடன் அருகில் உள்ள நவதிருப்பதி கோயிலில் ஒன்றான மாயக்கூத்தர் கோயில் குளத்துக்கரை படித்துறை வரை சாலை மிக குறுகலாக உள்ளது. இந்த இடத்தில் வாகனங்கள் வரும் போது எதிரே வரும் வாகனத்திற்கு வழிவிடும் போது பஸ் குளத்தில் விழுந்துவிடுமோ? என்ற நிலையில் மிக ஆபத்தான நிலையில் சென்று வருகிறது. இதனால் பஸ் பயணிகள் உயிரை கையில் பிடித்து கொண்டு பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் பெருங்குளம் குளத்து கரையோரப் பகுதியில் தடுப்பு சுவர் அல்லது தடுப்பு கம்பிகள் அமைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். இதில் குறிப்பாக பெருங்குளம் சிவன் கோயில் அருகில் குளத்துக்கரை சாலையில் பஸ் ஏறும் இடத்தில் இருந்து மாயக்கூத்தர் கோயில் குளத்து படித்துறை வரையில் போர்கால அடிப்படையில் முதலில் தடுப்பு சுவர் அமைத்திட வேண்டும் என பெருங்குளம் பகுதி மக்கள் மற்றம் வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: