கோவில்பட்டி ரயில் நிலையத்தில் பயணிகளை வழியனுப்ப வருவோரின் இரு சக்கர வாகனங்களுக்கு பூட்டு வாகன காப்பகம் மீது பொதுமக்கள் புகார்

கோவில்பட்டி, ஏப்.25: கோவில்பட்டி ரயில் நிலையத்தில் வெளியூர்களுக்கு செல்வோரை வழி அனுப்புவதற்காக வருவோரின் இருசக்கர வாகனங்களுக்கு வாகன காப்பக நிர்வாகத்தினர் பூட்டு போடப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். மதுரை ரயில்வே கோட்டத்தில் நெல்லைக்கு அடுத்து அதிக வருவாயை ஈட்டி தரும் ரயில் நிலையமாக கோவில்பட்டி ரயில் நிலையம் செயல்படுகிறது. ஆண்டுதோறும் கோவில்பட்டி ரயில் நிலையம் மூலம் பயணிகள் மற்றும் சரக்கு கட்டணம் மூலம் ரூ.2 கோடி வரை வருவாய் கிடைக்கிறது. கன்னியாகுமரி, நாகர்கோவில், நெல்லை, மதுரை, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகள் மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் 20க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் பாசஞ்சர் ரயில்கள் கோவில்பட்டி ரயில் நிலையத்தை கடந்து செல்கின்றன. வெளியூர்களில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள், அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆன்மீகம் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை ரயில் நிலைய வளாகம் முன்புறத்தில் உள்ள தனியார் வாகன காப்பகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி, அதற்கான டோக்கனை பெற்று செல்கின்றனர்.

பின்னர் திரும்பும்போது, வாகனம் நிறுத்துவதற்கான நேரத்தை கணக்கிட்டு வாகன காப்பகத்திடம் கட்டணத்தை செலுத்தி வாகனங்களை எடுத்து செல்கின்றனர். இதற்காக ரயில்வேதுறை நிர்வாகம் மூலம் வாகன காப்பகத்தை நடத்துவதற்கு தனியாருக்கு குத்தகைக்கு விட்டுள்ளது. இந்நிலையில் வெளியூர்களுக்கு செல்லும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களை ரயில் நிலையத்திற்கு இருசக்கர வாகனங்களில் அழைத்து வருவோர், தங்களது இருசக்கர வாகனங்களை ரயில் நிலைய வளாகத்தில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். பின்னர் ரயிலில் அவர்களை ஏற்றி விட்டு திரும்ப தங்களது இருசக்கர வாகனங்களை எடுக்க செல்லும்போது, வாகனத்தில் செயினை கோர்த்து வாகன காப்பகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பூட்டு போட்டு விடுகின்றனர். இதுகுறித்து வாகன காப்பகத்திடம் கேட்டால், நாங்கள் பூட்டு போடவில்லை, போலீசார் தான் பூட்டு போட்டு சென்றனர் என்று பதிலளிக்கின்றனர். போலீசாரிடம் கேட்டால், நாங்கள் பூட்டு போடவில்லை என்கின்றனர். இவ்வாறு ரயில் நிலையத்தில் உறவினர்களை வழியனுப்பி விட்டு, 5 அல்லது 10 நிமிடங்களில் திரும்ப வரும்போது இருசக்கர வாகனங்களில் செயினை கோர்த்து பூட்டு போடும்போது,

இதனை தட்டிகேட்டால் வாகன காப்பக ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. இதனால் குழந்தைகளுடன் உறவினர்களை அனுப்ப வரும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை திரும்ப எடுத்து செல்ல முடியாமல் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் போலீசாரை நாடினால் தங்களுக்கு தெரியாது என்கின்றனர். இதனால் எங்களது பிரச்னையை யாரிடம் கூறுவது என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இதனால் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் உறவினர்களை வெளியூர்களுக்கு அனுப்புவதற்காக இருசக்கர வாகனங்களில் வரும்போது, அந்த வாகனங்களை நிறுத்துவதற்காக ரயில் நிலைய முன்புற வளாகத்தில் உள்ள ஒரு இடத்தை தனியாக ஒதுக்கி, அந்த இடத்தில் எந்தவித இடையூறுமின்றி இருசக்கர வாகனங்களை நிறுத்தி, பின்னர் எடுத்து செல்லும் வகையில் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தனி இடம் ஒதுக்கினால் தீர்வு  இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்ட முன்னாள் ஆலோசனைக்குழு உறுப்பினர் சேதுரத்தினம் கூறுகையில்; கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கு தினமும் கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலை, எட்டயபுரம், விளாத்திகுளம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள், தொழிலதிபர்கள் என அனைத்து தரப்பு மக்களும் வந்து, வெளியூர்களுக்கு ரயில்களில் புறப்பட்டு செல்கின்றனர். இதனால் இந்த ரயில் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்படும். வெளியூர்களுக்கு செல்லும் உறவினர்களை அனுப்ப இருசக்கர வாகனங்களில் வருவோர், ரயில் நிலைய வளாகம் முன்பு வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். பின்னர் சிறிது நேரம் கழித்து வாகனங்களை எடுக்க செல்லும்போது, பூட்டு போட்டு வைப்பதால் அவர்கள் மிகவும் மனவேதனை அடைந்து வருகின்றனர். இதனால் வெளியூர்களுக்கு செல்லும் உறவினர்கள், நண்பர்கள் போன்றோரை அனுப்புவதற்காக ரயில் நிலையத்திற்கு இருசக்கர வாகனங்களில் வருவோரின் வாகனங்களை நிறுத்துவதற்கென தனியாக இடம் ஒதுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: