இலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு இரங்கல் வீரபாண்டியன்பட்டணம் தூத்துக்குடியில் மவுன ஊர்வலம்

தூத்துக்குடி,ஏப்.25: இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த 21ம்தேதி தேவாலயம் மற்றும் விடுதிகளில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் 350க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று தூத்துக்குடி சின்னக்கோயில் என்றழைக்கப்படும் திருஇருதயங்களின் பேராலயத்தில் நடந்தது. கத்தோலிக்க மறைமாவட்ட பிஷப் அந்தோணி ஸ்டீபன் தலைமை வகித்தார். இதில் ஆலய வளாகத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டு குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி திருப்பவனியாக வந்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அஞ்சலி திருப்பலியும் நடந்தது.

பிஷப் அந்தோணிசாமி ஸ்டீபன் அஞ்சலி உரை நிகழ்த்தினார்.  இதில் மறைமாவட்ட முதன்மை குரு, அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்கள் திரளாக கலந்து கொண்டனர். திருச்செந்தூர் :  வீரபாண்டியன்பட்டணத்தில் கிறிஸ்தவர்களின் மவுன ஊர்வலம் நேற்று மாலை நடந்தது. புனித தோமையார் ஆலயத்திலிருந்து புறப்பட்ட மவுன ஊர்வலத்திற்கு பங்குத்தந்தை அண்ட்ரூடீரோஸ் தலைமை வகித்தார். இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஏராளமானோர் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர். தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

Related Stories: