மெஞ்ஞானபுரத்தில் சாலையோரம் போக்குவரத்திற்கு இடையூறாக பேவர்பிளாக் கற்கள்

உடன்குடி,ஏப்.25:  மெஞ்ஞானபுரத்தில் சாலை அமைப்பதற்காக பல வாரங்களாக போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்பட்டிருக்கும் பேவர்பிளாக் கற்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்த மெஞ்ஞானபுரம் -உடன்குடி சாலை  கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் சீரமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மெஞ்ஞானபுரம் மீன்கடை பஜார் அருகில் இருந்து தான் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து மெஞ்ஞானபுரம் பஜார் வரையிலான தார் சாலை ராட்சத இயந்திரத்தால் தோண்டப்பட்டு ஜல்லி கற்கள் போடப்பட்டுள்ளது. இதிலிருந்து அதிகளவில் தூசிகள் வெளியேறி அந்தபகுதி மக்களுக்கு கடும் இன்னலை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சாலையில் ஆங்காங்கே பேவர்பிளாக் கற்கள் பதிப்பதற்கென இறக்கி வைத்தனர். ஆனால் அதற்குரிய ஆரம்ப கட்ட பணிகள் கூட செய்யவில்லை.

எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும் உடன்குடி சாலையில் வாகனங்கள் வந்து செல்லும் போது அந்தவழியே நடந்து செல்ல கூட முடியாத அளவில் தான் இடம் உள்ளது. மேலும் சாலை குறுகிய அளவில் இருப்பதால் அவ்வப்போது அந்த பேவர் பிளாக் கற்கள் மீது வாகனங்கள் மோதி சிறு, சிறு விபத்துகளும் நிகழ்கின்றன. இரவு நேரங்களில் சாலையில் வைக்கப்பட்டிருக்கும் பேவர் பிளாக் கற்கள் வாகன ஓட்டிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை. அதனை அடையாளம் காணும் வகையில் ஒளிரும் ஸ்டிக்கர்களோ, சாலைப்பணிகள் நடப்பதற்குரிய எச்சரிக்கை பலகைகளும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து கிடப்பில் கிடக்கும் சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: