கோடை மழைக்கு நொறுங்கிய அரியநாயகிபுரம் பிரதான சாலை

நெல்லை, ஏப். 25:  சேரன்மகாதேவி அருகே உள்ளது  அரியநாயகிபுரம். இந்த ஊரின் பிரதான சாலையில் நாள் முழுவதும் வாகனபோக்குவரத்து உள்ளது.  முக்கூடல், அம்பை, பாபநாசம், கடையம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பஸ் மற்றும் வாகனங்கள் அதிகளவில் இந்த சாலையில் செல்கின்றன.  இங்கு சமீபத்தில் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக சாலையின் பெரும்பாலான பகுதிகள் உடைக்கப்பட்டு குழாய் புதைக்கப்பட்டன. பின்னர் அதன் மீது சாலை போடாமல் மண்ணை மூடிவைத்து விட்டனர். குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் சாலை அமைக்கப்பட்டது. நகரின் மையபகுதி சாலைகள் மீண்டும் புதுப்பிக்கப்படவில்லை. இதனால் மேடுபள்ளம் நிறைந்த இந்த சாலையில் வாகனங்கள் தட்டுத் தடுமாறி படகு போக்குவரத்து போல் சென்று வருகின்றன. நேற்று முன்தினம் இப்பகுதியில் திடீரென கோடைமழை பெய்தது. சிறிது நேரம் பெய்த பலத்த மழையால் சாலை உடைந்த பகுதிகளில் இருந்த மண் அரிக்கப்பட்டு மேலும் பள்ளங்கள் தோன்றின.

சிலபகுதிகளில் பெரியஅளவில் பள்ளங்கள் ஏற்பட்டு அதில் மழை நீர் பள்ளம் தெரியாத அளவிற்கு தேங்கின. குண்டும், குழியும் சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் இந்தச் சாலையில் தற்போது வாகனங்கள் செல்ல மிகுந்த சிரமப்படுகின்றன. பெரிய பள்ளங்கள் ஏற்பட்ட பகுதிகளில் வாகனங்கள் தடுமாறி விழாத  வகையில் பெரிய கல் தூண்களை அப்பகுதியினர் நட்டிவைத்துள்ளனர். மேடுபள்ளங்கள் அதிகம் ஏற்பட்டுள்ளதால் இரவில் செல்லும் வாகனங்கள் தடுமாறி சரிகின்றன. எனவே இந்த சாலையை  போர்கால அடிப்படையில் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையேல் பெரிய அளவில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக இப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர்.

Related Stories: