களக்காடு அருகே ஒற்றை யானை மீண்டும் அட்டகாசம்

களக்காடு, ஏப். 25:  களக்காடு மேற்குத்தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு புலி, சிறுத்தை, யானை, கரடி, செந்நாய், நீலகிரிவரையாடு, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட பல்வேறு வகை விலங்கினங்கள் உள்ளன. இவைகள் அவ்வவ்போது மலையடிவார பகுதியில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவது வழக்கம். இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக சிதம்பரபுரம் மலையடிவார பகுதியான சத்திரங்காடு, சாஸ்தா கோயில், கோழிக்கால் பகுதிகளில் ஒற்றை ஆண் யானை முகாமிட்டுள்ளது. இந்த யானை இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் புகுந்து பனை மரங்களை துவம்சம் செய்து வருகிறது. வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபட்ட போதும் யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் இப்பகுதியிலேயே சுற்றி திரிகிறது. இதுவரை 10க்கும் மேற்பட்ட பனை மரங்களை யானை சாய்த்துள்ளது.

யானை நடமாட்டத்தால் விவசாயிகள், பகல் நேரங்களிலும் விவசாய நிலங்களுக்கு அச்சத்துடனே சென்று வருகின்றனர். இதனிடையே நேற்று முன்தினம் இரவு மீண்டும் சத்திரங்காட்டில் ஒற்றை யானை புகுந்தது. இதைப்பார்த்த விவசாயிகளும், ஏற்கனவே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினரும் தீப்பந்தங்கள் காட்டி யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் யானை 4 பனை மரங்களை சாய்த்தது. பனைகளின் குருத்துகளை ருசித்து சாப்பிட்ட யானை நீண்ட நேரத்திற்கு பிறகே அங்கிருந்து வெளியேறியது.  களக்காடு பகுதியை மிரட்டி வரும் ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவும், யானைகள் நாசம் செய்த பனை மரங்களுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: