கத்திவாக்கத்தில் முறையான பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்த கழிவுநீர் கால்வாய்

திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட கத்திவாக்கத்தில் கழிவுநீர் கால்வாய் உடைந்து கிடப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடனே சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட கத்திவாக்கத்தில் சீயோன் நகர், காந்திநகர், ஆர்.எஸ்.ரோடு, வள்ளுவர் நகர் போன்ற தெருக்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் பாதாள சாக்கடை வசதி இல்லை. இதனால் வீடுகளில் செப்டிக் டேங்க் அமைத்து அதில் கழிவு நீரை தேக்கி, அது நிரம்பியதும் தனியார் லாரிகள் மூலம் பணம் கொடுத்து அப்புறப்படுத்தி வருகின்றனர். இதனால் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய கழிவுநீரை தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள  கால்வாயில் விடுகின்றனர்.

தற்போது கத்திவாக்கத்தில் உள்ள கழிவுநீர் கால்வாயை திருவொற்றியூர் மண்டல அதிகாரிகள் முறையாக பராமரிப்பதில்லை. மேலும்  இப்பகுதியில்  குப்பைகளை சரியாக அகற்றாததால்  அவை கால்வாயில் விழுந்துவிடுகிறது.

இதனால் பல இடங்களில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்பதோடு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இந்த கழிவுநீர் கால்வாய்  பொதுமக்கள் செல்லும் பாதையில் நடுவில் அமைக்கப்பட்டு உள்ளது. அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள இந்த கால்வாய் பல இடங்களில் உடைந்து சிதிலமடைந்தும் இருப்பதால் கால்வாயின் மீது பொதுமக்கள் நடந்து செல்லும் பொழுது திடீரென்று கால்வாயின் மூடிகள் உடைந்து உள்ளே விழுந்து விடுகின்றனர். மேலும் பல இடங்களில் உடைந்து திறந்தே கிடப்பதால் சிறுவர்கள் விளையாடும்போது தவறி கால்வாயின் உள்ளே விழுந்து விடுகின்றனர்.

எனவே இந்த சிதிலமடைந்த கால்வாய் மூடிகளை புதிதாக மாற்றியும் தூர்வாரி  சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘கத்திவாக்கம் நகராட்சியாக இருந்த போது கால்வாயை  அடிக்கடி தூர்வாருவது, சீரமைப்பது, குப்பைகளை அகற்றுவது, தடையில்லாமல் குடிநீர் வழங்குவது போன்ற பணிகள் நடைபெற்றது. ஆனால் இப்பகுதி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பிறகு  பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முழுமையாக செய்து தருவது இல்லை. தற்போது கழிவுநீர் கால்வாயில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு திறந்து கிடக்கிறது. இதனால் இந்த கால்வாயில் பலர் விழுந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளனர். தினமும் பீதியுடன் கால்வாயின் மீது  நடக்கின்றனர். எனவே இதை சீரமைக்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்கள் நடத்தினோம். ஆனாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்றனர்.

Related Stories: