பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்படும் குப்பை தொட்டி

பல்லாவரம்: சென்னை பல்லாவரம், ஜிஎஸ்டி சாலையில் வைக்கப்படும் குப்பை தொட்டிகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் விபத்து ஏற்படும் முன்பாக இவற்றை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாநகரில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளில் ஒன்று பல்லாவரம். மேலும் சென்னையின் அனைத்துப் பகுதிகளுக்கும் எளிதாக செல்லக்கூடிய வகையில், சென்னையின் பிரதான நுழைவு வாயில்போல் பல்லாவரம் திகழ்வதால், அனைத்து தரப்பு மக்களும் அதிக அளவில் பல்லாவரத்தில் குடியேறி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டே பொதுமக்களின் வசதிக்காக, சமீபத்தில் பல்லாவரம் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்கான பாலம் கட்டும் பணி தற்போது பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் நடைபெற்று வருகிறது. இதனால் காலை, மாலை என எந்த நேரமும் பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து செல்லும் நிலையே உள்ளது. இதனால் செல்ல வேண்டிய இடங்களுக்கு, குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இந்த நிலையில் சமீப காலமாக பல்லாவரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்லாவரத்தில் இருந்து திருநீர்மலை செல்லும் சிக்னல் அருகே ஜிஎஸ்டி சாலையை ஆக்கிரமித்து குப்பை தொட்டிகள் அதிகளவில் வைக்கப்பட்டு உள்ளது.

பல்லாவரம் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப்போக்கால் அவ்வழியே செல்லும் இரு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களும் அடிக்கடி விபத்தில் சிக்கும் அபாயம் இருப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டிவருகின்றனர்.   இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் போதிய குப்பை தொட்டிகள் இல்லாமல் பொதுமக்கள் சாலையில் குப்பைகளை கொட்டி செல்லும் அவல நிலை உள்ளது. இதனால் தெருக்களில் குப்பைகள் தேங்கி கடும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

குடியிருப்பு அருகே போதிய குப்பை தொட்டிகளை அமைக்க முன்வராத பல்லாவரம் நகராட்சி நிர்வாகம் குடியிருப்பு இல்லாத, போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஜிஎஸ்டி சாலையில், மக்களுக்கு இடையூறாக குப்பை தொட்டிகளை வைப்பது ஏன்? என தெரியவில்லை. நகராட்சி நிர்வாகம் என்பது மக்களுக்கு நலம் பயக்கும் நலத்திட்டப் பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டுமே தவிர, பொதுமக்களின் உயிருக்கு உலை வைக்கும் ஆபத்தான வேலைகளில் ஈடுபடக் கூடாது.  எனவே, பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையை ஆக்கிரமித்து போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறாக வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளை நகராட்சி நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்தி, வாகன ஓட்டிகள் விபத்தில்லா பயணம் மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்’’ என்றனர்.

Related Stories: