முசிறி பகுதியில் பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்

தா.பேட்டை, ஏப்.24:  முசிறி பகுதியில் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் பாசன வாய்க்கால்களை  பெரிதும் நம்பியுள்ளனர். இதன் மூலம் கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு விவசாயம்  மேற்கொள்ளும் நிலையில் உள்ளனர். தற்போது வாய்க்காலில் தண்ணீர் இல்லாமல்  வறண்டு உள்ளது. எனவே தற்போதைய சூழலில் வாய்க்கால்களை தூர்வாரி சீர்படுத்த  வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இது குறித்து விவசாயி  அய்யம்பாளையம் மூர்த்தி என்பவர் கூறுகையில், பாசன வாய்க்கால்  போதிய ஆழம்  இன்றியும், கரைகள் முறையாக பராமரிக்கப்படாமல் பல இடங்களில்  இடிந்தும் காணப்படுகிறது. தற்போது கோடைகாலம் நிலவுகிறது.

வாய்க்காலிலும்  தண்ணீர் இல்லை. இச்சூழலை சாதகமாக பயன்படுத்தி முசிறி பகுதியில் உள்ள பாசன  வாய்க்கால்களை தூர்வாரி, கரைகளை உயர்த்த வேண்டும். வறட்சி மற்றும் இயற்கை  பேரிடர்களால் பாசன வாய்க்கால் கரையோரங்களில் இருந்த மா, கொய்யா, தென்னை, ஆல், அரசு, பனை, அத்தி, இலுப்பை உள்ளிட்ட பல்வேறு மரங்கள்  அழிந்துவிட்டது. எனவே வாய்க்காலில் தண்ணீர் வரும் சமயத்தில் அவற்றை நட்டு  வளர்ப்பதற்கு மரக்கன்றுகளை மாநில அரசு விவசாயத் துறை மூலம் தயார்படுத்த  வேண்டும். மேலும் தண்ணீர் வரும் சமயத்தில் அவற்றை நட்டு வளர்த்து  பராமரிக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

தற்போது முதல் கட்டமாக காவிரி  ஆற்றின் பாசன வாய்க்கால்களை தூர்வாருவதற்கு தமிழக அரசு உடனடியாக உரிய  நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இப்பணிகள் முறையாக நடைபெற்று உள்ளதா  என்பதனை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற பொறியாளர்கள் தலைமையில் குழு அமைக்க  வேண்டும் என்று கூறினார். வறண்டு கிடக்கும் பாசன வாய்க்கால்களை தற்போது  சீரமைத்தால் காவிரி ஆற்றில் தண்ணீர் வந்து வாய்க்கால்களுக்கு பாசனத்திற்காக  திறந்து விடும்போது கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்ல உதவியாக இருக்கும்  என்பதே இப்பகுதி விவசாயிகளின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: